அதிகரிக்கும் மின்சாரத் தேவை: இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து எரிசக்தியைத் தருவிக்க கடலடி கம்பிவடம்

அதிகரிக்கும் மின்சாரத் தேவை: இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து எரிசக்தியைத் தருவிக்க கடலடி கம்பிவடம்

2 mins read
6aad7f84-e830-4dbc-9dcf-c9f29293059b
-
Google News Preferred Icon

இந்தோனீசியாவில் இருந்து மாற்று எரிசக்தியை இறக்குமதி செய்ய கடலடி கம்பிவடத்தை சிங்கப்பூர் நிறுவ உள்ளது.

இதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த இடிஎஃப் எனப்படும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனத்துடன் சிங்கப்பூர் மின் உற்பத்தி நிறுவனமான எஸ்பி குழுமம் பங்காளித்துவம் செய்துகொண்டு உள்ளது.

1,000 மெகாவாட்-பீக் சூரியசக்தி ஆலையை நிறுவும் உத்தேசத் திட்டமும் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் அடங்குவதாக இவ்விரு நிறுவனங்களும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இரு மின் உற்பத்தி நிறுவனங்களும் திங்கட்கிழமை செய்துகொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வர்த்தகம், ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளன.

இந்தோனீசியாவிலிருந்து இதர சுத்திகரிப்பு எரிசக்தியைத் தருவிப்பதற்கான வாய்ப்புகளையும் இந்நிறுவனங்கள் ஆராயும்.

தீவு முழுவதும் சூரியசக்தி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்வதன் மூலம் சிங்கப்பூர் அதன் மின்சக்தித் தேவையைச் சமாளிக்க மாற்று எரிசக்தியின் துணையை நாடி வருகிறது.

தற்போதைய சூழலில் சிங்கப்பூ ரின் மின் உற்பத்தி பெரும்பாலும் எரிவாயுவைச் சார்ந்தே உள்ளது.

மலேசியா, இந்தோனீசியாவோடு ஆஸ்திரேலியாவில் இருந்தும் மாற்று எரிசக்தியைத் தருவிக்கவும் சிங்கப்பூர் திட்டமிட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து அதனை இறக்குமதி செய்ய கடலடியில் சுமார் 740 கிலோ மீட்டர் நீளத்துக்கு கம்பிவடம் அமைப்பது திட்டம்.

இது தவிர, நீர்மின்சாரத்தை மலேசியா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சோதித்துப் பார்க்க உள்ளது சிங்கப்பூர்.

"கடலடி மின்மாற்று கம்பிவட வேலைகள் முடிவடைந்ததும் வட்டார மின்சக்தி ஒருங்கிணைப்பில் அது முக்கிய பங்கு வகிக்கும்," என்று கூட்டறிக்கை தெரிவித்தது.