முன்னாள் அமைச்சர் இ.டபிள்யூ. பார்க்கரின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் அவரது குடும்பத்தினரும் தேசிய கல்விக் கழகத்தின் உடற்பயிற்சிக் கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் ஏட்டுக்கல்வி குழுவும் இணைந்து ஒரு சிறப்பு நூலை நேற்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டன.
திரு பார்க்கர் சிங்கப்பூர் விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பு, இ.டபிள்யூ. பார்க்கர் பேராசிரியர் பதவி, உபகாரச் சம்பளம் ஆகியவை பற்றி இந்நூல் எடுத்துரைக்கும்.
முன்னாள் இ.டபிள்யூ. பார்க்கர் பேராசிரியர் பதவி, உபகாரச் சம்பளம் ஆகியவற்றைப் பெற்றவர் பத்துப் பேர் விளையாட்டுத் துறையைப் பற்றி கூறும் அனுபவங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
மறைந்த திரு பார்க்கர் 1964ல் சிங்கப்பூரின் முதலாவது சட்ட அமைச்சரானார். 1970 முதல் 1990 வரை 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலை வராக இருந்தார்.
உள்ளூர், வட்டார, அனைத்துலக ரீதியில் விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கு அனைத்துலக ஒலிம்பிக் குழு திரு பார்க்கருக்கு ஒலிம்பிக் ஆர்டர் எனும் சிறப்புமிக்க நிர்வாக வெள்ளி பதக்கம் அளித்து கௌரவித்தது.திரு பார்க்கர், ஹாக்கி, கிரிக்கெட், காற்பந்து, ரக்பி, டென்னிஸ், திடல்தடப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.டபிள்யூ. பார்க்கர் பேராசிரியர் பதவி மற்றும் உபகாரச் சம்பள நிதித் திட்டம் அவர் மறைந்து ஓராண்டுக்குப் பிறகு 2002ல் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், "இந்த நூலை வெளியிட்ட தேசிய கல்விக் கழகத்துக்கும் திரு பார்க்கரின் குடும்பத்துக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
"விளையாட்டின் சக்தி நாட்டின் ஒற்றுமைக்கும் எதிர்காலத்துக்கும் முக்கியம் என்பதை வலியுறுத்தி வந்த திரு பார்க்கர், அதை மெய்ப்பித்தும் காட்டினார். ஆரோக்கியமான உடல், துடிப்பான மனநிலையை வளர்ப்பதிலும், சிறந்த குணம் ஆகியவற்றுக்கு கட்டொழுங்கு இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.
"திரு பார்க்கரின் பெருமைகளை நினைவுகூரும் இந்நாளில், அவரது பல பங்களிப்புகள் நமது தேசத்தின் ஒற்றுமையைக் கட்டிக்காத்து, நமது விளையாட்டின் தரத்தை இன்னும் உயரமான இடத்துக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்," என்றார் திரு டியோ.
"திரு பார்க்கரைப் பற்றி நினைவுபடுத்தும் இ.டபிள்யூ. பார்க்கர் பேராசிரியர் பதவி மற்றும் உபகாரச் சம்பள நிதித் திட்டம் நமது திறன்களையும் ஆற்றல்களையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து சிங்கப்பூருக்கும் சிறந்து பங்களிக்க ஊக்கமளிக்கும்," என்று திரு டியோ தெரிவித்தார்.
திரு பார்க்கரின் புதல்விகளான டெப்ரா, கார்லா உட்பட அவரது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

