மின்சக்தியால் இயங்கும் சைக்கிளுக்கு (பிஏபி) தனது விநியோக ஊழியர்கள் மாறும்போது ஏற்படும் செலவில் 50% வரை 'டெலிவரு சிங்கப்பூர்' ஏற்றுக்கொள்ளும்.
தங்களது வாகனங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் 200 விநியோக ஊழியர்களின் பண நெருக்கடியைக் குறைப்பதே அந்நிறுவனத்தின் நோக்கம் என அது தெரிவித்துள்ளது. நேற்று டெலிவரு சிங்கப்பூர் மின்சக்தியால் இயங்கும் சைக்கிள் மேம்பாட்டு மானியத் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின்கீழ் நடந்துசென்றும் மிதிவண்டி வாயிலாகவும் உணவு விநியோகம் செய்வோர் மின்சக்தியால் இயங்கும் சைக்கிளுக்கு மாறி, கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
இம்மாதம் 200 விநியோக ஊழியர்களுக்கு இத்திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்படும். நிலப் போக்குவரத்து ஆணைத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களை 'மொபொட்', 'ஃபால்கன் பிஇவி' ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள, $500 வரையிலான செலவை டெலிவரு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
$100,000 மதிப்பிலான இத்திட்டம், டெலிவரு சிங்கப்பூரின் உலகளாவிய சமூக நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் விநியோக ஊழியர்களுக்குக் கூடுதல் விலைக் கழிவுகளும் இலவச இணைப்புகளும் கிட்டும்.
வரும் 2040ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் தூய்மையான எரிசக்தியால் இயக்கப்பட வேண்டும் என்ற சிங்கப்பூரின் தொலைநோக்கு இலக்கின் தொடர்பில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று டெலிவரு நிறுவனம் தெரிவித்தது.
பிஏபிகளின் விலை $700லிருந்து $1,800 வரையிலானது என்றும் இந்த திட்டத்தின் மூலம் விநியோக ஊழியர்களின் பண நெருக்கடியைக் குறைத்து அவர்கள் ஈட்டக்கூடிய வருவாயை அதிகரிக்க விரும்புவதாகவும் டெலிவரு கூறியது.

