வீவக, தனியார் அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகை ஆகஸ்ட் மாதம் பதிவானதைவிட சென்ற மாதம் அதிகரித்தது. இரண்டு பிரிவுகளிலும் தொடர்ந்து நான்காவது மாதமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது. சொத்துச் சந்தை தளமான '99.கோ', 'எஸ்ஆர்எக்ஸ்' எனும் சொத்துச் சந்தை நிறுவனம் ஆகியவை இத்தகவல்களை வெளியிட்டன.
கொண்டோமினியம் தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை ஆகஸ்ட் மாதம் இருந்ததைவிட சென்ற மாதம் 0.7 விழுக்காடு அதிகரித்தது. இதற்கு முன் இப்பிரிவில் மூன்று மாதங்களாக வாடகை மாற்றமின்றி இருந்தது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் வாடகை எட்டு விழுக்காடு அதிகரித்தது. எனினும், 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவான ஏற்றத்துடன் ஒப்பிடுகையில் இவ்விகிதம் குறைவு. அப்போதுதான் இப்பிரிவில் வாடகை ஆக அதிக அளவில் 10.3 விழுக்காடு உயர்ந்தது.
தொடர்ந்து 15வது மாதமாக வீவக வீடுகளின் வாடகை அதிகரித்தது. இப்பிரிவில் ஆகஸ்ட் மாதம் பதிவானதைக் காட்டிலும் சென்ற மாதம் வாடகை 0.6 விழுக்காடு அதிகரித்தது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் வீவக வீட்டு வாடகை 8.8 விழுக்காடு உயர்ந்தது. இவ்விகிதம், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவானதைக் காட்டிலும் 6.8 விழுக்காடு குறைவு. இப்பிரிவில் அப்போதுதான் ஆக அதிக அளவில் வாடகை அதிகரித்தது. நான்கறை வீடுகளைத் தவிர எல்லா வீவக வீடுகளின் வாடகையும் சென்ற மாதம் அதிகரித்தது. முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள வீடுகளின் வாடகை ஒரு விழுக்காடு உயர்ந்தது. முதிர்ச்சியடையாத பேட்டைகளில் உள்ள வீட்டு வாடகை 0.1 விழுக்காடு அதிகரித்தது.
சென்ற மாதம் கொண்டோமினியம் வீடுகளை வாடகைக்கு எடுத்தோரின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு குறைந்தது. வாடைக்கு எடுக்கப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கையும் 0.5 விழுக்காடு குறைந்தது.

