சிங்கப்பூரில் இயங்கும் 'எட்டோம்' நிறுவனத்தில் 676 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்ய 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்' வங்கி திட்டமிட்டுள்ளது. 'பை நவ் பே லேட்டர்' எனப்படும் பொருளை முதலில் வாங்கி, அதற்குப் பின்னர் கட்டணத்தைச் செலுத்தும் முறைக்கு வகைசெய்யும் தளம் 'எட்டோம்'. இரு அமைப்புகளுக்கும் இடையிலான இந்த 10 ஆண்டுகால ஒப்பந்தம், இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய சந்தைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த வட்டாரத்தில் 'எட்டோம்' போன்ற நிதித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கும் வங்கி ஒன்றுக்கும் இடையே இப்படிப்பட்ட ஒப்பந்தம் உருவாகியுள்ளது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முதலில் பொருட்களை வாங்கிய பிறகு கட்டணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும். அதன் பின்னர் மின்னிலக்க முறையில் கடன் வழங்கும் சேவைகளுக்கும் நீட்டிக்கப்படும்.
ஒப்பந்தத்தின் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் ஆசியாவில் 16 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதும் பல்வேறு நிதிக் கட்டமைப்புகளின் உதவியுடன் மின்னிலக்க முறையில் கடன் வழங்கும் சேவைகளில் பங்கு வகிப்பதும் இலக்குகள். தென்கிழக்காசியாவில் மட்டும் மின்னிலக்க முறையில் கடன் வழங்கும் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 92 பில்லியன் அமெரிக்க டாலர் என 'எட்டோம்', 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்' இரண்டும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்' வங்கியின் முதலீடு, கூடுதல் வர்த்தகர்களை மேலும் பல வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள வகைசெய்ய 'எட்டோம்' நிறுவனத்திற்கு உதவும். அதே நேரத்தில், அதன் வாடிக்கையாளர்கள் தங்களின் கைபேசிகளின்வழி கூடுதலான புத்தாக்க நிதிச் சேவைகளையும் பெறுவர்.

