வழக்கு செலவு $87,000 பிரதமரிடம் தர உத்தரவு

வழக்கு செலவு $87,000 பிரதமரிடம் தர உத்தரவு

2 mins read
5ed06b44-c202-4cbf-b45d-1dc3c8729f3c
'த ஆன்லைன் சிட்டிசன்' முதன்மை ஆசிரியர் டெரி சியூ. -
multi-img1 of 2

அவதூறு வழக்கு ஒன்றின் செலவை ஈடுகட்ட பிரதமர் லீ சியன் லூங்கிற்கு ஏறக்குறைய $87,000 வழங்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'த ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் திரு லீ அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த சமூக அரசியல் இணையத்தளத்தின் முதன்மை ஆசிரியர் டெரி சியூ, அந்தக் கட்டுரையை எழுதிய மலேசிய எழுத்தாளர் ருபாஷினி சண்முகநாதன் ஆகியோருக்கு எதிராகத் தொடுத்த அவதூறு வழக்கில் திரு லீ வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கான வழக்கு செலவுத் தொகையை அளிக்க தற்காப்புத் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது. அந்தக் கட்டுரை 2019 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.

இந்த வழக்கை எதிர்த்து தற்காத்து வழக்காட திருவாட்டி ருபாஷினி வரவில்லை. அதனைத் தொடர்ந்து திரு லீக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரைப் பிரதிநிதித்து மூத்த வழக்கறிஞர் தாவிந்தர் சிங் வாதாடினார்.

பொதுவாக வழக்கில் வெற்றிபெற்றவர்களுக்கு அந்த வழக்கின் செலவுத் தொகையை அளிக்க உத்தரவிடப்படும். இவ்வழக்கில் திருப்பித் தரப்பட வேண்டிய செலவுத் தொகை எவ்வளவு என்

பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் திரு சியூவின் வழக்கறிஞர் தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

$87,832.93 வழங்க தமது கட்சிக்காரருக்கு உத்தரவிடப்பட்டதால் அதனை இந்த வாரத்தில் நன்கொடை மூலம் திரட்ட அவர் தமது பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமக்கு வழங்கப்படவிருக்கும் தொகையை அறப்பணிகளுக்கு பிரதமர் நன்கொடையாக வழங்கவிருப்பதை அவரது பத்திரிகைச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆட்ரி லிம் பிரதமர் லீக்கு இழப்பீட்டுத் தொகையாக $210,000 வழங்க கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

வெளியிடப்பட்ட கட்டுரை அவதூறுக்கு உரியது என்றும் பிரதமர் லீ தமது தந்தைக்கு விசுவாசமாக இல்லை என்னும் கருத்தை அது புகுத்தி இருப்பதாகவும் திருவாட்டி லிம் கூறினார்.

'த ஆன்லைன் சிட்டிசன்' கட்டுரை அவதூறு வழக்கில் வெற்றி