பல்கலைக்கழக மாணவர்கள், புதிய பட்டதாரிகள்: வேலை பற்றிய எண்ணம் 45 விழுக்காட்டினரிடம் மாறியது

பல்கலைக்கழக மாணவர்கள், புதிய பட்டதாரிகள்: வேலை பற்றிய எண்ணம் 45 விழுக்காட்டினரிடம் மாறியது

1 mins read
655cf54c-e70b-40b6-b002-acdca68a3b1b
-
Google News Preferred Icon

ஆசிய பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், புதிதாகப் பட்டம் பெற்றவர்கள் ஆகியோரில் சுமார் 46 விழுக்காட்டினர், பெருந்தொற்றுச் சூழலில் தங்கள் வேலைப் பாதைகளை மறுஆய்வு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு, விருப்பம், எதிர்பார்ப்பு ஆகியவை பற்றிய எண்ணங்களைக் கிருமிப் பரவல் மாற்றி யுள்ளதாக அவர்கள் கூறினர்.

சிஎஃப்ஏ கழகம், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட 15 சந்தைகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் அது தெரிய வந்தது.

ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 41 விழுக்காட்டினர் கிருமிப் பரவலுக்குப் பின்னர் தாங்கள் சேர விரும்பும் துறையை மாற்றுவது பற்றி யோசித்ததாகக் கூறினர்.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களில் 22% பேர் போதிய வேலைகள் இல்லாமல் வேறு துறைக்கு மாற வேண்டிய சாத்தியம்தான், தங்களுக்கு இருக்கும் பெரிய அச்சம் என்றனர். விரும்பிய வேலைக்குப் போதியதகுதி இல்லை என்பதே தங்களது மிகப் பெரும் அச்சம் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 21 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

ஆய்வில் கலந்துகொண்ட மொத்த பேரில் சுமார் 83 விழுக்காட்டினர் தற்போதைய வேலைச் சூழலில் திறன்களை மேம்படுத்தி, நிபுணத்துவத் சான்றிதழ் அல்லது முதுநிலை சான்றிதழ் பெறுவது அவசியம் என்றனர்.

கூடுதலானோர் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்வதால், பெருந்தொற்றுச் சூழல் காரணமாக அதிகத் திறன்பெற்ற ஊழியர் அணி உருவாகலாம் என்று சிஎஃப்ஏ கழகத்தின் ஆசிய பசிஃபிக் வட்டாரத்துக்கான நிர்வாக இயக்குநர் நிக் போலார்ட் கூறினார்.