வீவக பற்றாக்குறை $2.34பி; முந்தைய ஆண்டில் $2.66பி

வீவக பற்றாக்குறை $2.34பி; முந்தைய ஆண்டில் $2.66பி

2 mins read
2467c47e-5aaa-4356-8d70-63f45716aae3
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பற்றாக்குறை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் $2.34 பில்லியனாக குறைந்தது.

இது அதற்கு முந்தைய நிதி ஆண்டில் $2.66 பில்லியனாக இருந்தது. நிதி ஆண்டு முழுவதும் கொள்முதல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை முன்பைவிட குறைவாக இருந்ததே இதற்கான காரணம்.

கொவிட்-19 தொற்று காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய அடுக்குமாடி வீடுகளுக்கு அதிக மானியம் கொடுக்கிறது.

ஆகையால் கட்டி முடிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்குமானால் செலவிடும் மானியமும் குறையும்.

பற்றாக்குறை குறைந்ததற்கு மேம்பாட்டுப் பணிகளில் குறைவு இருந்ததும் காரணம். வீவகவின் வருடாந்திர அறிக்கை இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது. அந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆண்டு முழுவதும் அதிக மத்திய சேம நிதி வீட்டு மானியம் கொடுக்கப்பட்டது. வாடகைத் தள்ளுபடி அளிக்கப்பட்டது. அடமானக் கடன் நிலுவைத்தொகையை தாமதமாகச் செலுத்துவதற்கு விதிக்கப்படும் கட்டணம் ஒத்திவைக்கப்பட்டது.

வீவகவுக்கு அதன் வீடமைப்பு திட்டங்களில் $2.64 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டது. இது இதர நடவடிக்கைகள் மூலம் கிடைத்த $3.3 மில்லியன் உபரியைக் கொண்டு சரிசெய்யப்பட்டது.

மொத்தம் 8,124 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு கொள்முதல்காரர்களிடம் கொடுக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டில் 11,609 ஆக இருந்தது.

இப்போது இருக்கும் வீடுகள் மேம்படுத்துவதற்கான பற்றாக்குறை $440 மில்லியனில் இருந்து $242 மில்லியனாகக் குறைந்தது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய பற்றாக்குறைய ஈடுசெய்ய ஒவ்வொர் ஆண்டும் நிதி அமைச்சிடம் இருந்து மானியம் பெறுகிறது. இந்த மானியம் மார்ச் 31ல் முடிவடைந்த 12 மாத காலத்தில் $2.34 பில்லியனாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் $2.69 பில்லியன் ஆகும். வீவக 1960ல் தோற்றுவிக்கப்பட்டது முதல் அதற்கு அரசாங்கம் இதுவரை மொத்தம் $38.57 பில்லியன் மானியம் வழங்கி இருக்கிறது. கொவிட்-19 காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டதால் பிடிஓ திட்ட வீடுகளை வாங்க மக்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.