தன் பராமரிப்பில் இருந்த முதியவரைக் குளிப்பாட்ட உதவிய 33 வயது இந்தோனீசியப் பணிப்பெண், அதைப் பல்வேறு காணொளிகளாக பதிவு செய்ததுடன் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்தும் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதியவருக்குத் தெரியாமல் பணிப்பெண் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. முதியவரின் அடையாளம் காக்க, பணிப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. பொங்கோல் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு வரை ஏழு முறை தன் கைபேசியைக் கொண்டு பணிப்பெண் இவ்வாறு பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
முதியவருக்கு அவமானம் இழைக்கும் நோக்கில் வேறு நபருடன் 'வாட்ஸ்அப்' தளம் வழி குறைந்தது நான்கு முறை காணொளிகளைப் பணிப்பெண் பகிர்ந்தும் உள்ளார் என்று கூறப்படுகிறது. ஒரு காணொளியை அந்தப் பெண் 'டிக்டாக்' தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இக்காணொளி தொடர்பில் தங்களுக்குப் புகார் அளிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். பணிப்பெண் மீதான வழக்கு இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.