'கேர்ஷீல்டு லைஃப்' திட்டம்: 1979, அதற்கு முன் பிறந்த சிங்கப்பூர்வாசிகள் சேரலாம்

2 mins read
394eb983-23d0-4c88-b6ba-3e59438a7f97
-

தகுதி உள்ள, 1979ல் அல்லது அதற்கு முன்னதாக பிறந்த சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் நவம்பர் 6ஆம் தேதி முதல் 'கேர்ஷீல்டு லைஃப்' திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டம், நீண்டகாலத்திற்குப் பராமரிப்பு கிடைக்க வகை செய்யும் காப்புறுதித் திட்டமாகும்.கடுமையான உடற்குறைகள் ஏற்படும்போது அவற்றுக்குச் சிகிச்சை பெற தேவைப்படும் பணத்தை இதன் மூலம் ஈடு செய்யலாம்.

எல்டர்ஷீல்டு 400 திட்டத்தின் சந்தாதாரர்கள்-1970 முதல் 1979 வரை பிறந்தவர்கள்- தானாகவே கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக அவர்கள் எதையும் செய்யவேண்டியதில்லை என்று சுகாதார அமைச்சு இன்று செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

மற்ற அனைவரும் careshieldlife.gov.sg என்ற கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்ட இணையத் தளம் மூலம் சேர வேண்டும். இந்தக் காப்புறுதித் திட்டம், எல்டர்ஷீல்டு திட்டத்தைவிட சிறந்த நீண்டகால பண உதவியை வழங்குகிறது. கேர்ஷீல்டு லைஃப் திட்டம் 1980ல் அல்லது அதற்குப் பிறகு பிறந்த சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் கட்டாயமனது. இந்தப் பிரிவினர் 2020 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அல்லது 30 வயதாகும்போது தானாகவே திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இப்போது 740,000க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரும் நிலையில் இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் 65 வயதுள்ள குடிமக்களில் இரண்டு பேரில் ஒருவருக்கு ஆயுளில் கடுமையான உடற்குறை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தை அமலாக்கலாம் என்று எல்டர்ஷீல்டு மறுபரிசீலனைக் குழு பரிந்துரைத்ததை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதற்கு இதுவே காரணம்.

கடந்த 1979 அல்லது அதற்கு முன்னதாக பிறந்த சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அனைவரும், கடுமையான உடற்குறைக்கு ஆளாகாத பட்சத்தில், இந்தத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இப்போதைய எல்டர்ஷீல்டு சந்தா தாரர்கள் எல்டர்ஷீல்டு திட்டத்தில் இருந்து கேர்ஷீல்டு லைஃப் திட்டத்துக்கு மாறிக்கொள்ள விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு எல்டர்ஷீல்டு காப்புறுதி திட்டப் பாதுகாப்பு தொடர்ந்து கிடைக்கும். கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர ஊக்கமூட்டும் விதத்தில் அரசாங்கம் $2,500 வரைப்பட்ட ஊக்குவிப்பை வழங்குகிறது. 1979ல் அல்லது அதற்கு முன்னதாக பிறந்திருக்கும் குடிமக்கள் அனைவரும் 2023 டிசம்பர் 31க்கு முன்பு இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் இந்த ஊக்குவிப்பு கிடைக்கும். அதோடு, மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறைகளைச் சேர்ந்த குடிமக்கள் அந்தத் தேதிக்குள் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் கூடுதலாக $1,500 ஊக்குவிப்பை பெறலாம். அரசாங்கம் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து எல்டர்ஷீல்டு காப்புறுதித் திட்ட நிர்வாகத்தை தனியாரிடம் இருந்து தன்வசம் எடுத்துக்கொள்கிறது.