சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று அதன் நாணயக் கொள்கையைக் கடுமையாக்கியது. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி வரும் காலாண்டுகளில் உயர்ந்து காணப்படும் எனும்போதும் பணவீக்கம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஆணையம் கூறியது. இடைக்காலத்தில் விலைகள் நிலையாக இருப்பதை உறுதிசெய்வது தனது குறிக்கோள் என்றும் நாணய ஆணையம் கூறியது.
ஆணையம் இந்நேரத்தில் அதன் நாணயக் கொள்கையைக் கடுமையாக்காது என்றே பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.
சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை சற்று உயர அனுமதிப்பதாக ஆணையம் நேற்று தெரிவித்தது. அந்த அறிவிப்புக்குப் பின்னர் அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 0.3% உயர்ந்து 1.3475 ஆனது. இது மூன்று வாரத்தில் ஆக அதிக உயர்வாகும்.
சிங்கப்பூர் வெள்ளி வலுவானால் பணவீக்கம் அவ்வளவு உயராது என்றும் சிஐஎம்பி வங்கிப் பொருளியல் நிபுணர் சோங் செங் வுன் கூறினார்.

