சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்குவோரை வருகைக்கூடத்தில் வரவேற்று அழைத்து வரும் வாய்ப்பு ஐந்து மாதங்களுக்கு பிறகு நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மீண்டும் இப்போது கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் ஓர் ஏற்பாடு அக்டோபர் 19 முதல் நடப்புக்கு வருகிறது. இதற்கு முன்னதாக சாங்கி விமான நிலையத்தில் விதிகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.
விமான நிலையம் தொடர்பான தொற்றுக் குழுமம் பெரியளவில் உருவானதை அடுத்து பயணிகளை வரவேற்று அழைத்து வரும் நடைமுறை கடந்த மே மாதம் முதல் கட்டுப்படுத்தப்பட்டது.
கொவிட்-19 ஆபத்து குறைவாக உள்ள நாடுகள், வட்டாரங்களில் இருந்து வருகின்ற பயணிகளை வரவேற்று அழைத்துவர குடும்பத்தாரும் நண்பர்களும் நிபுணத்துவ சேவையினரும் இப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று சாங்கி விமான நிலையம் நேற்று தனது இணையத் தளத்தில் தெரிவித்தது.
ஹோட்டல்கள், போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைப் பிரதிநிதிப்போர் நிபுணத்துவ சேவையாளர்களில் அடங்குவர்.
வருகைக்கூடத்தில் தரையிறங்கும் பயணிகளை அழைத்து வர இத்தகைய நிபுணத்துவ சேவைகளுக்கு செப்டம்பர் முதல் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. விமானம் தரையிறங்கிய பிறகுதான் வருகைக்கூடத்தில் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதி கிடைக்கும்.
வருகையாளரை வரவேற்க ஒருவருக்குத்தான் அனுமதி உண்டு. மக்கள் தங்கள் வாகனங்களில் முனையம் 1 மற்றும் முனையம் 3ல் இருந்து பயணிகளை அழைத்துச் செல்லலாம் என்றும் சாங்கி விமான நிலையம் தெரிவித்தது.
தொற்று, தடுப்பூசி நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு நாடுகளையும் வட்டாரங்களையும் நான்காக சிங்கப்பூர் பிரித்து இருக்கிறது. கொவிட்-19 தொற்று ஆபத்து மிகக் குறைவாக உள்ள நாடுகளும் வட்டாரங்களும் முதல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.
சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இவற்றில் அடங்கும்.
முனையம் 2ம் முனையம் 4ம் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. தொற்றுக் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் இவை சென்ற ஆண்டு மே முதல் மூடப்பட்டன. இவற்றை மீண்டும் திறக்க உடனடித் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.

