சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகள் விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஈரிலக்கச் சரிவை சந்தித்து இருக்கிறது.
கொவிட்-19 சமூகத்தொற்று அதிகரித்ததன் விளைவாக பார்வை யாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் கடுமையாயின. இதையடுத்து வீடு கட்டி விற்கும் பல நிறுவனங்கள் புதிய வீடுகளை விற்பனைக்கு விடுவதை ஒத்திவைத்துவிட்டன.
சென்ற மாதம் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 31 விழுக்காடு குறைந்து 834 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 1,216 என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்ற மாதம் தனியார் வீடுகள் விற்பனை 37% குறைவாக இருந்தது என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
சென்ற ஆண்டில் விற்பனைக்கு வந்த புதிய வீடுகள் ஏறக்குறைய 210தான். ஆகஸ்ட் மாதம் 836 வீடுகள் புதிதாக விற்பனைக்கு கொடுக்கப்பட்டன. ஓராண்டுக்கு முன் இந்த எண்ணிக்கை 1,340ஆக இருந்தது.
சந்தைக்குப் புதிதாக வந்த வீடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தனியொரு கட்டுமானத் திட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.
புறநகர்ப் பகுதிகளில் அல்லது மத்திய வட்டாரத்துக்கு வெளியே பெரிய அளவில் புதிய வீடுகள் அவ்வளவாக விற்பனைக்கு விடப்படவில்லை.
இதனிடையே, புறநகர் பகுதிகளில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை விலை, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் குறைந்தபட்சம் $2 மில்லியன் என்ற புதிய உச்சத்தைத் தொட்டதாக ஆரஞ்ச்டீ & டை நிலச்சொத்து நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுத் துறை மூத்த துணைத் தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சன் தெரிவித்தார். 583 அடுக்குமாடி வீடுகள் தலா $2 மில்லியனுக்கும் அதிக விலைக்குக் கைமாறியதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி அவர் கூறினார்.
கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளையும் சேர்த்துப் பார்க்கையில் சென்ற மாதம் புதிய வீடுகள் விற்பனை 2% குறைந்து 1,296 ஆக இருந்தது. ஓராண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 6.4%ஆகக் குறைந்தது.
இந்த ஆண்டில் $2 மில்லியனுக்கும் அதிக விலையில் ஏழு புதிய கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் விற்கப்பட்டன. சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 1ஆக இருந்தது.
குறைந்தபட்சம் தலா $1.5 மில்லியன் விலையுள்ள கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இத்தகைய 281 வீடுகள் குறைந்தபட்சம் தலா $1.5 மில்லியன் விலைக்குக் கைமாறியதாக திருவாட்டி சன் தெரிவித்தார்.

