செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
94e4b5fd-e6f3-464b-9720-a55f6e3a045e
-

கொவிட்-19: ஒரே நாளில்

15 பேர் மரணம்

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக 23, 34 வயதுகளில் உள்ள இரண்டு உட்பட 15 பேர் மரணமடைந்து உள்ளதாக சுகாதார அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது. சிங்கப்பூரில் இதுவரை ஒருநாளில் இந்த அளவுக்கு மரணம் இடம்பெறவில்லை.

கொரோனா தொற்று தொடர்பில் மாண்டுள்ள மிகவும் இளையவர்கள் இதுவரை அந்த இருவரும்தான் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மரணமடைந்த 23 வயது இளைஞர் ஒரு தடுப்பூசியைப் போட்டு இருந்தார். 34 வயது சிங்கப்பூரர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அந்த இருவருக்கும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன.

வியாழக்கிழமை மரணமடைந்த இதர 13 பேருக்கும் வயது 60 முதல் 80வரை என்று அமைச்சு குறிப்பிட்டது.அவர்களில் எட்டுப்பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர். ஐந்து பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அனைவருக்குமே உடல்நலப் பிரச்சினைகள் உண்டு.

புதிதாக மரணமடைந்தவர்களையும் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 207 ஆகி உள்ளது. வியாழக்கிழமை புதிதாக 2,932 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. அவர்களில் 2,412 பேர் சமூகத் தொற்றுக்கு ஆளானவர்கள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள் 517 பேர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர். சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 436 பேருக்கு வயது 60க்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டது.

பூஸ்டர் தடுப்பூசி: 14 பேருக்குப் பாதக விளைவுகள் என சந்தேகம்

சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. அது முதல் 230,000க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அவர்களில் 14 பேருக்குப் பாதக விளைவுகள் ஏற்பட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விகிதாச்சாரம் 0.006 விழுக்காடாக இருக்கிறது என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது. கடுமையான பாதிப்புகள் இருந்ததாக இரண்டு புகார்கள் செய்யப்பட்டன.

இதனிடையே, இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வாக்கில் 9,209,201 பைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி மற்றும் மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களில் பாதக விளைவுகள் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் விகிதாச்சாரம் 0.14 விழுக்காடாக இருக்கிறது. 12,589 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

வல்லுநர்கள்: தடுப்பூசி காக்கும்

உடல் பருமன், இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ள இளம் வயதினர், கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கிருமி தொற்றினால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளையும் மரணத்தையும் தவிர்த்துக்கொள்ள தடுப்பூசி உதவும் என்று அவர்கள் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்கள்.

இத்தகைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோர், அவர்கள் இளம் வயதினராக இருந்தாலும்கூட, கொவிட்-19 தொற்றினால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அல்லது மரணமடையக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இதய நல நிலையத்தின் இதய நல நிபுணர் டான் ஹுவெ செம் தெரிவித்தார்.

விதிவிலக்கு கிடைக்காது

துணைப்பாட வகுப்பு அல்லது கல்விச் செறிவாக்க வகுப்புகளில் கலந்துகொள்ளும் பிள்ளைகளின் பராமரிப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால் கடைத்தொகுதிகளில் நுழைய அனுமதி கிடைக்காது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பராமரிப்பாளர்கள் மாற்று எற்பாடுகளைச் செய்துகொள்ளமுடியும். தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஒருவர் சிறார்களை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம். கடைத்தொகுதிகளுக்குச் செல்வதற்கு முன் தங்களுக்குத் தொற்று இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை முடிவுகளைப் பயன்படுத்தலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி முதல் கடைத்தொகுதிகளுக்குச் செல்ல அனுமதி இராது. இருந்தாலும் கடைத்தொகுதிகளில் செயல்படும் சிறார் பராமரிப்பு அல்லது மருத்துவ சேவைகளுக்காக அங்கு செல்ல வேண்டியவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.