வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் விடுதியில் எதிர்பாராத விதமாக கொவிட்-19 தொற்று கூடியதை அடுத்து, போதிய வளங்கள் இல்லாத காரணத்தினால் அந்த விடுதியில் இருந்து ஊழியர்களை பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூரோங்கில் இருக்கும் அந்த விடுதியில் அண்மைய நாட்களில் தொற்றுக் கூடியது.
முதலாளி ஒருவர், அந்த விடுதியில் தங்கி இருக்கும் தன்னுடைய ஊழியர்களுக்கு மொத்தமாக கட்டாய பரிசோதனை நடத்தியதன் விளைவாக தொற்று அதிகளவில் தெரியவந்தது என்று வெளிநாட்டு ஊழியர்களைப் பராமரிப்பதற்காக அமைக்கப்பட்ட மனிதவள அமைச்சுப் பிரிவின் தலைவரான துங் யுய் ஃபாய் நேற்று தெரிவித்தார்.
அந்த விடுதியில் தங்கி இருக்கும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று அந்த விடுதிக்குச் சென்ற திரு துங் சுட்டிக்காட்டினார்.
ஜாலான் துக்காங் விடுதியில் 2,000 ஊழியர்கள் தங்கி இருக்கிறார்கள். அவர்களில் 500 பேருக்குத் தொற்று இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.
அந்த ஊழியர்களில் ஏறத்தாழ 1,400 பேர் செம்ப்கார்ப் மரின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
கொவிட்-19 தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதில் தாமதம், தரமற்ற உணவு ஆகியவை தொடர்பில் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாள் கழித்து திரு துங்கின் வருகை இடம்பெற்றது.
விடுதிவாசிகளுடன் உரையாடிய திரு துங், அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு அந்த விடுதியை நடத்தும் நிறுவனம், முதலாளி ஆகியோருடன் சேர்ந்து படிப்படியாகத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

