பல்வேறு துறைகளில் விரிவான தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஏற்படுத்த சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்
ஆண்டுக்கு $1 பில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
மரினா பே சேண்ட்ஸில் நேற்று நடைபெற்ற ஆர்ஐஇ (ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிறுவனம்) தொழில்துறை தின நிகழ்வில் இந்த முதலீடு பற்றி அறிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் தொடர்பிலான யோசனைகள் குறித்து விவாதிக்க கல்வியாளர்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் பிரபல ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் ஒன்றுகூடினர்.
$1 பில்லியன் முதலீடு நவீன உற்பத்தி, உயிரியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளையும் உள்ளடக்கும் என்று கூறினார் தேசிய ஆராய்சி அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங்.
"இதுபோன்ற முதலீடுகளின் மூலம் உலகத் தொழில்நுட்ப விநியோகத் தொடர்பில் நமது நிலையை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
"நேரம் வரும்போது உலகளவிலான புதிய வெற்றியாளர்களை தெமாசெக் உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
"சிங்கப்பூரிலும் சிங்கப்பூர் வழியாக இந்த வட்டாரத்திலும் வாய்ப்புகளைத் தேடும், புத்தாக்கத்தின் மீது கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களையும் நான் வரவேற்
கிறேன்," என்றார் திரு ஹெங்.
சிங்கப்பூரின் 'ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிறுவனம் 2025' என்னும் திட்டத்திற்காக $25 பில்லியன் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகளுக்காக இது செலவிடப்பட உள்ளது.
தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நிறுவனம் என்னும் ஒருங்கிணைந்த அம்சத்திற்கான 'உலக-ஆசிய மையம்' என்னும் இலக்கை நோக்கி சிங்கப்பூரைக் கொண்டு செல்வது திட்டத்தின் நோக்கம்.
தெமாசெக் மேற்கொள்ள இருப்பது இந்தத் திட்டத்திற்கான கூடுதல் முதலீடு.
ஆர்ஐஇ தொழில்துறை நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு ஹெங், சிங்கப்பூரில் புத்தாக்கத்தைத் தீவிரப்படுத்த மூன்று வழிகளைப் பட்டியலிட்டார்.
"முதலாவதாக, புத்தாக்கத்தைப் பரவலாக விரிவுபடுத்ததுல். துடிப்புமிக்க சுற்றுச்சூழல் அதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது இதற்கு அவசியம்.
"அடுத்ததாக, அதிகத் தாக்கம் நிகழக்கூடிய அம்சங்கள் மீதான புத்தாக்க முயற்சிகளில் கவனம் செலுத்துவது. அதாவது, ஆராய்சிக்காக உலகளவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் முதலீடு என்பது சிறியதாக இருக்கலாம்.
"ஆயினும் இதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த தீவிர கவனம், வேகம், செயல்திறன் போன்றவை அவசியம்.
"மூன்றாவதாக, வெவ்வேறு காலகட்டத்தில் புத்தாக்கத் திட்டங்களில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தயாராக இருத்தல். ஆராய்ச்சியை மேற்கொள்ளவோ மாற்றத்தை ஏற்படுத்தவோ அதிக காலம் தேவைப்படும் பட்சத்தில் அதற்காகப் பொறுமையுடன் காத்திருந்து சாதிக்க வேண்டும்," என்று விவரித்தார் துணைப் பிரதமர்.
விரிவான தொழில்நுட்ப ஆராய்ச்சி, புத்தாக்க நடவடிக்கைகளுக்கு தெமாசெக் நிதி ஆதரவு

