தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தேச பழமைப் பாதுகாப்பில் 'செயிண்ட் தெரசா ஹோம்' தளம்

2 mins read
e81f85ad-5bdf-4813-b1ae-262eb57d77db
அப்பர் தாம்சன் ரோட்டிலுள்ள 84 ஆண்டு பழமைவாய்ந்த கட்டடத் தொகுப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அப்பர் தாம்சன் ரோட்டில் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளாக மூத்தோர் உள்ளிட்ட பலருக்கும் பாதுகாப்பு அடைக்கலம் கொடுத்த, பல்வேறு கட்டடங்களை உள்ளடக்கிய பகுதி பழமைப் பாதுகாப்பில் இடம்பெற உள்ளது.

அந்தத் தொகுப்பில் உள்ள ஆறு கட்டடங்களும் தொகுப்பின் முகப்பில் பெயர்தாங்கிய வளைவுடன் கூடிய நுழைவாயிலும் பழமைப் பாதுகாப்பில் சேர்க்கப்பட உள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று தெரிவித்தது.

இந்த வளைவு 'செயிண்ட் தெரசா ஹோம்' அமைப்புக்குச் சொந்தமானது.

பழமைப் பாதுகாப்பில் சேர்க்கப்பட உள்ள கட்டடங்களில் முக்கியமானது இரண்டு மாடி தேவாலயம். கட்டடத் தொகுப்பின் இதயப் பகுதியாக இந்தத் தேவாலயம் விளங்கி வந்தது.

உத்தேசமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டடங்களைத் தவிர கட்டடத் தொகுப்பு வளாகத்தில் உள்ள இதர கட்டடங்கள் பழமைப் பாதுகாப்பில் சேர்க்கப்படவில்லை என ஆணையம் கூறியது.

1935ஆம் ஆண்டில் டெர்பிஷைர் ரோட்டில் சிறிய அளவில் உருவான 'செயிண்ட் தெரசா ஹோம்' 1937ஆம் ஆண்டில் அப்பர் தாம்சன் ரோட்டுக்கு மாறியது.

அப்போது முதல் இதன் கட்டடத் தொகுப்பில் தேவாலயம், தங்கு விடுதிகள் மற்றம் நிர்வாகக் கட்டடம் போன்றவை அமைந்திருந்தன.

கட்டடங்களின் பாரம்பரியம், கட்டடக் கலை, சமூக முக்கியத்துவம் மற்றும் அப்பர் தாம்சன் வட்டார அடையாளச் சின்னம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் பழமைப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் கூறியுள்ளது.

முன்னோடிக் கட்டடக் கலைஞர் ஹோ குவோங் இயூ என்பவரால் இந்தக் கட்டடத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டது.

போருக்கு முந்திய நல்வாழ்வு இல்லத்திற்கு உதாரணமாக இடம்பெற்றுள்ள அரிய படைப்பாக இது போற்றப்பட்டது.