செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a7a457a6-83ff-44d1-a3dc-c1b6e5c5d34d
-
Google News Preferred Icon

கணக்காளர் சட்டத்திற்கான உத்தேச மாற்றங்கள் பற்றி அறிவிப்பு

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூரின் கணக்காளர் சட்டத்திற்கான உத்தேசத் திருத்தத்தை நிதி அமைச்சும் அக்ரா எனப்படும் கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து அறிவித்துள்ளன. இந்த உத்தேசத் திருத்தம் குறித்த கருத்துகளை பொதுமக்கள் நவம்பர் 13ஆம் தேதி வரை கருத்துத் தெரிவிக்குமாறு அழைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போதைய சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்கான திருத்தங்கள் கணக்குத் தணிக்கைத் தரத்தை மேம்படுத்தக் கோரும் என இரு அரசாங்க அமைப்புகளும் நேற்று தெரிவித்தன.

"முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம்பகமான தகவல்களை அளிப்பதன் மூலம் நம்பத்தகுந்த

வர்த்தக நாடாக சிங்கப்பூரை மேம்படுத்த கணக்குத் தணிக்கைத் தரம் மேம்படுவது அவசியம். இதனை எட்ட, கணக்குத் தணிக்கை ஒழுங்குமுறைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திருத்தங்களை உத்தேச மசோதா கொண்டிருக்கும்," என்றன அவை.

'பாலிவுட் வெஜ்ஜிஸ்' சொத்து வரி மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

உள்ளூர் பண்ணை மற்றும் உணவகமான பாலிவுட் வெஜ்ஜிஸ் நிறுவனம் சொத்து வரி தொடர்பான சட்டப் போராட்டத்தில் வெற்றிபெறத் தவறிவிட்டது. லிம் சூ காங்கில் அமைந்துள்ள சொத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய வரி கணக்கீடு தொடர்பாக இந்நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச்சொத்தின் வருடாந்திர மதிப்பு $87,000லிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு $107,100 ஆக உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப சொத்து வரி கணக்கிடப் பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட சொத்தின் மதிப்பை சொத்துவரிக் கணக்கீட்டில் சேர்க்கக்கூடாது என்று பாலிவுட் வெஜ்ஜிஸ் வாதிட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி ஏடிட் அப்துல்லா இந்த வழக்கிற்கான எழுத்துபூர்வ உத்தரவை நேற்று பிறப்பித்தார். பாலிவுட் வெஜ்ஜிஸ் மனு மேல்முறையீட்டுக்குத் தகுதிபெறவில்லை என்று அந்த மனுவை அவர் நிராகரித்தார்.

சிங்கப்பூர் வலைப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரான திருவாட்டி ஐவி சிங்-லிம், அவரது கணவரும் என்டியுசி ஃபேர்பிரைஸின் முன்னாள் தலைமை நிர்வாகியு மான லிம் ஹோ செங் ஆகியோரால் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பாலிவுட் வெஜ்ஜிஸ் நிறுனம்.

தோட்டம், பண்ணை, உணவகம், மதுபானக் கூடம், நிகழ்வுக்கூடம், அலுவலகம் மற்றும் ஊழியர்கள் தங்கு வதற்கான வீடுகள் போன்றவை இதில் இடம்பெற்று உள்ளன. கட்டடம் அமைந்துள்ள நிலப்பகுதி சிங்கப்பூர் நில ஆணையத்திடம் இருந்து குத்தகையாகப் பெறப்பட்டு உள்ளது.

ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய பெண்ணுக்கு சிறை

கணவரின் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதத்தின்போது அவரை கத்தியால் குத்திய பெண்ணுக்கு நேற்று எட்டு மாதம், மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வாக்குவாதம் கடுமையாக நடந்தபோது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கடித்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மனைவி தனது கணவரின் நெஞ்சில் கத்தியால் குத்தி விட்டார். போலிஸ் வந்தபோதும் அவர்களின் தகராறு நிற்கவில்லை.

கத்தியுடன் மனைவியும் ரத்தம் சொட்டிய சட்டையுடன் கண வரும் இருப்பதை போலிஸ் கண்டது. தனித்தனி யாகப் பிரித்த பின்னர் இருவரையும் போலிசார் கைது செய்த னர். 2019 ஜூலை 2ஆம் தேதி சம்பவம் நிகழ்ந்த தாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. கணவருக்கு ஏற்கெனவே 9 மாதச் சிறையும் $4,500 அபராதமும் விதிக்கப்பட்டுவிட்டது.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்து தல், குழந்தையை மோசமாக நடத்துதல் போன்ற குற்றங் களுக்காக அவருக்கு அந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டன. குழந்தை, இளையர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குழந்தை இடம்பெற்று இருப்பதால் குழந்தையின் பாதுகாப்பு கருதி கணவர், மனைவி பெயர் மற்றும் அவர்கள் தொடர்பான இதர விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.