சிங்கப்பூர் தேசிய கண் நல நிலையத்தில் சிகிச்சை பெறும் பார்வை மங்கும் குறைபாடு உள்ளவர்கள், உதவிக் கருவிகளைக் கட்டணமில்லா கடனாகப் பெறமுடியும்.
அவற்றைப் பயன்படுத்திய பிறகு அதை விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாமா, வேண்டாமா என்பது பற்றி கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் முடிவுசெய்ய ஏதுவாக அந்த ஏற்பாடு இடம்பெறுகிறது.
சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால் இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவதற்கான தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ளவும் அந்த ஏற்பாடு உதவுகிறது.
சிங்கப்பூர் தேசிய கண் நல நிலையத்தின் பார்வை மங்கும் குறைபாடு உள்ளோருக்கான சிகிச்சை நிலையத்தில் ஆண்டுக்கு சுமார் 800 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
இதனிடையே, அந்தக் கருவிகளைக் கடனாகப் பெறுவதற்கான திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய கண் நல நிலையத்தின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் வோங் டியன் யின், எதிர்காலத்தில் மருத்துவர்கள் மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதைச் சுட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு தகவல் அமைச்சர் திருவாட்டி ஜோசஃபின் டியோ, சிறப்பு மருத்துவ தேவை உள்ளவர்கள் சுதந்திரமான வாழ்வை மேற்கொள்ள கருவிகளைக் கடனாக அளிக்கும் தொழில்நுட்பம் வழிவகுக்கும் என்றார்.
பார்வை மங்கும் குறைபாட்டைச் சரிசெய்ய உதவும் கருவிகளைக் கடனாகப் பெறும் நிலையத்திற்கு 'அறிவார்ந்த தொழில்நுட்ப முதுமைக்கால சுறுசுறுப்பு வள முகப்பு' என்று பெயர். அதில் தொடக்கமாக 16 கருவிகள் இருக்கின்றன. தேவையானவர்கள் அவற்றைக் கடனாகப் பெறமுடியும். வார்த்தைகளைப் படிக்க பயன்படுத்தப்படும் கருவி, முக அடையாளக் கருவி, கணக்கீட்டுக் கருவிகள் முதலானவை அவற்றில் அடங்கும்.
கடன் கருவி நிலையம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. அது முதல் 16 பேர் கருவிகளைக் கடனாகப் பெற்றுள்ளனர். அவற்றை மூன்று வாரம் பயன்படுத்திவிட்டு நல்ல நிலையில் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி ஒப்படைத்தால் கட்டணமில்லை.

