இவ்வாண்டு நடைபெற்ற சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தந்த யிப் பின் சியுவிற்கு வெகுமானமாக 800,000 வெள்ளி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 'ஏஏஏ' எனப்படும் விளையாட்டாளர் சாதனை விருதுகளுக்கு 'டிபிஎஸ்' வங்கி ஆதரவாளர் அமைப்பாக உருவெடுத்திருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
தனது ஒவ்வொரு தங்கப் பதக்கத்திற்கும் 200,000 வெள்ளித் தொகையைப் பெறவிருந்திருந்தார் யிப். இப்போது அந்தத் தொகை இரு மடங்காகியுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்குத் தங்கம் வென்று தந்த ஜோசஃப் ஸ்கூலிங் பெற்ற பரிசுத் தொகை ஒரு மில்லியன் வெள்ளி.விளையாட்டாளர் சாதனை விருதுகளின் முக்கிய ஆதரவு அமைப்பாக சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியம். அதற்கு ஈடுகொடுத்து 'டிபிஎஸ்' வங்கியும் இணைந்து ஆதரவளிக்கிறது. 2024ஆம் ஆண்டு சிறப்புத் தேவையுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள் வரை இந்த ஏற்பாடு நீடிக்கும்.