உடலில் ஏற்படக்கூடிய சிறுசிறு மாற்றங்களையும் கவனிப்பது அவசியம்

மருத்துவத்துறைப் பணியாளர் திருவாட்டி தனா, மார்பகப் புற்றுநோய் தமக்கு இருப்பதை 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிந்துகொண்டார். மார்பகத்தில் வலி இருந்ததை 2018ஆம் ஆண்டிறுதியில் உணர்ந்த பிறகு, தாம் வேலை பார்த்த செங்காங் மருத்துவமனையிலேயே இதற்கான பரிசோதனைக்குச் சென்றார் அவர். அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ‘கீமோதெரபி’ சிகிச்சை தொடங்கியது.

மூன்று வார சிகிச்சையை அடுத்து இவரது உடல்நிலை மெல்லத் தேறத் தொடங்கியது. அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்ததாகவும் பின்னர் ஆண்டிற்கு ஓரிரு முறை மருத்துவரைத் தாம் காணவேண்டி இருந்ததாகவும் திருவாட்டி தனா கூறினார். நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே திருவாட்டி தனா பரிசோதனை செய்துகொண்டதால் அந்நோய் மேலும் கடுமையான பாதிப்புகளைத் தருவதைத் தடுக்க முடிந்தது.
ஆயினும், மார்பகப் புற்றுநோயாளிகளில் 10 விழுக்காட்டினர் மட்டுமே திருவாட்டி தனாவைப் போல ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்துள்ளனர்.
தங்களுக்கு நோய் இருப்பதே பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை என்ற கவலையளிக்கும் தகவலை செங்காங் மருத்துவமனையின் மார்பகப் பராமரிப்புப் பிரிவைச் சேர்ந்த தாதி சுமதி மேரி பகிர்ந்துகொண்டார்.

“சிங்கப்பூரில் பெண்களுக்கு ஆக அபாயகரமான உயிர்கொல்லி நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெண்களிடையே ஏற்பட்ட மரணங்களில், மார்பகப் புற்றுநோயால் இறந்தவர்கள் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் என்று தேசிய நோய்கள் பதிவகம் குறிப்பிடுகிறது,” என்று ஐந்து ஆண்டுகளாக இப்பிரிவில் பணிபுரியும் திருமதி மேரி தெரிவித்தார்.

மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழி இல்லை என்றாலும் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் பொதுவாகவே நோய் ஏற்படாமல் இருக்க வகைசெய்யும் என்கிறார் இந்த மூத்த தாதி.

கடந்த 11 ஆண்டுகளாக திருவாட்டி தனா ‘மெமோகிராம்’ பரிசோதனையைச் செய்துகொள்வதுடன் தம்முடைய சகோதரிகளையும் நண்பர்களையும் அப்பரிசோதனையைச் செய்ய ஊக்குவித்து வருகிறார்.

“மருத்துவமனையில் வேலை செய்வதால் நோய் தொடர்பான விழிப்புணர்வை என்னால் மேலும் நன்கு அறிய முடிகிறது,” என்று அவர் கூறினார்.
‘பிசிஆர்ஏ1’ என்ற மார்பகப் புற்றுநோய் மரபணுவைக் கொண்ட பெண்கள், தங்களது வாழ்நாளில் இரு மார்பகங்களிலுமே புற்றுநோய் உருவாகும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர். இந்த மரபணுவைக் கொண்டுள்ள ஆண்களும் அதே அபாயத்தை எதிர்நோக்குவதாக மருத்துவ இணைப் பேராசிரியர் பெனிதா டான் தெரிவித்தார்.

ஆயினும், எல்லா பெண்களும் இந்த அபாயத்தை எதிர்நோக்கலாம் என்று தெரிவித்த பேராசிரியர் டான், மார்பகப் புற்றுநோயாளிகளில் 70 விழுக்காட்டினரின் ரத்த உறவுகளுக்கு இந்நோய் இல்லை என்பதையும் அவர் சுட்டினார்.

“75 வயது வரை உயிர் வாழும் பெண்களில் 13 பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த அபாயம் நாளாக ஆக அதிகரிக்கிறது,” என்றார் அவர். சுறுசுறுப்பற்ற வாழ்க்கைமுறை, மதுப்பழக்கம், உடல் பருமன், கருத்தரித்தலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ‘ஹார்மோன்’ சிகிச்சை போன்றவை புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகப்படுத்தும் என்று கூறினார்.

மார்பகப் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதால் பெண்கள் தங்களது உடல்நலனைப் பேணிக்காத்து அபாயத்தைக் குறைக்க முயலவேண்டும் என்றார் தனாவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த பேராசிரியர் டான். தனாவைப் போலவே உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் பெண்கள் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.
“ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்படும் மார்பகப் புற்றுநோய்க்கு, சிகிச்சைக் கட்டணங்கள் குறைவு. குணமடையும் வாய்ப்பும் அதிகம். எனவே வருமுன் காப்பதே சாலச் சிறந்தது,” என்று அவர் கூறினார்.

மெமோகிராம் பரிசோதனை தொடர்பில் நிதி உதவித் திட்டம்

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெண்கள் மெமோகிராம் பரிசோதனையைச் செய்துகொள்ள சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்திடமிருந்து $25 நிதி உதவி பெறலாம். இவ்வாண்டு நவம்பர் 20ஆம் தேதிக்குள், இத்திட்டத்தின்கீழ் பங்கேற்கும் மார்பகப் பரிசோதனை மையங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் மெமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிதித் திட்டத்திற்குத் தகுதிபெறுவது குறித்த மேல்விவரம் அறிய http://bit.ly/scsbcam2021 இணையப்பக்கத்தை நாடலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!