இந்து இளங்கோவன்
பிரம்மாண்டமான, வண்ணமய சுவரோவியங்களிலிருந்து பின்வீதிகளில் மறைந்திருக்கும் சிறிய சுவரோவியங்கள் வரை பளிச்சிடும் நகர்ப்புற கலைப்படைப்பு ஒவ்வொன்றும் நமது நகரத்தின் கதையை சொல்கிறது.
ஆனால் இச்சுவரோவியங்களை வரைவது எளிதல்ல.
ஒரு முறை நார்த் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கும் மூன்று மாடிக் கட்டடச் சுவரில் ஓவியம் தீட்ட 27 வயது சுவரோவியக் கலைஞர் சங்கீதா பரமசிவத்திற்கு வாய்ப்பு கிடைத்தது.
"ஒரு தாளில் ஓவியம் வரைவது போல் அல்ல, சுவரோவியம் தீட்டுவது. ஒரு பகுதியை வரைந்து வண்ணம் தீட்டிய உடனே மழை வந்துவிடும். மழைநீர் சாயத்தை அழித்து விடும். அந்த ஓவியத்தை மீண்டும் தீட்ட வேண்டும். ஏணி ஏறி, கட்டடச் சாரக்கட்டில் நின்று முழு உடலையும் பயன்படுத்தி உழைக்கவேண்டும்.
சில நேரங்களில் உருவப்படங்கள் வரையும்பொழுது சுவருக்கு மிக அருகில் இருந்தால் அதை எப்படி வரைந்திருக்கிறோம் என்பது தெரியாது. அதற்கென்று சற்று தூரம் சென்று நின்று பார்த்து வரலாம் என்று நினைத்தாலும் சாரக்கட்டு ஓவியத்தை மறைத்துவிடும்," என்று சுவரோவியம் தீட்டும் பணியில் அன்றாடம் சந்திக்கும் சவால்களைப் பட்டியலிட்டார் சங்கீதா.
மலேசியாவில் வளர்ந்த சங்கீதா, 15 வயதிலிருந்தே சுவரோவியங்கள் வரைய தொடங்கிவிட்டார்.
சிறுவயதில் அம்மாவும் பாட்டியும் கண்ணன், சிவன் போன்ற இந்துக் கடவுள் ஓவியங்களைத் தீட்டுவதைப் பார்த்து வளர்ந்த அவருக்கு ஓவியம் தீட்டுவதில், குறிப்பாக உருவப்படங்களை வரைவதில் நிறைய ஆர்வம் இருந்தது.
தற்போது கணவருடன் சிங்கப்பூரில் வசிக்கும் சங்கீதா, இது வரை 50க்கும் மேற்பட்ட சுவரோவியங்களைத் தீட்டியிருக்கிறார்.
உணவகங்கள், வீடுகள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என பல இடங்களில் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி சுவரோவியங்களை வரைந்து தந்திருக்கும் இவர், இந்தப் பணியை 2016ஆம் ஆண்டிலிருந்து முழுநேரமாக செய்து வருகிறார்.
பலரும் தேர்வு செய்யாத பாதை
"பலர் இதை ஒரு வேலையாகக் கருதுவதில்லை. நான் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வந்தால்கூட என்னிடம், "எப்போது ஒரு வேலையில் சேரப் போகிறாய்?", "சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் ஒரு நிரந்தர வேலை வேண்டும்,", "ஓவியம் தீட்டுவது தானே? அதற்கு எதற்கு ஓய்வு?" என்றெல்லாம் கூறியிருக்கின்றனர்.
"ஆனால் இது எனக்கு மனநிறைவைத் தருகிறது. தேவையான வருவாயும் கிடைக்கிறது," என்றார் சங்கீதா.
பொதுவாக சுவரோவியங்கள் என்றால் அதிக விலை என்ற எண்ணம் தவறு என்கிறார் சங்கீதா. கட்டுப்படியான விலையில் சுவரோவியச் சேவையை வழங்குவதே தமது தொழிலின் தனித்தன்மை என்றார் அவர்.
தமது கற்பனைத் திறனை பயன் படுத்திப் புதிய படைப்புகளை உருவாக்க சுதந்திரம் தரும் வாடிக்கையாளர்களை இவர் அதிகம் வரவேற் கிறார்.
சிங்கப்பூரில் சுவரோவியம் வரையும் இந்திய கலைஞர்களைத் தமக்கு அதிகம் தெரியாது என்று கூறிய சங்கீதா, "பலர் ஓவியக் கலையில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், சுவரில் வரைய பயப் படுகின்றனர். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் வரைய வரைய உங்களது திறன் மேம்படும்.
"ஒரு தாளில் வரையும்போது தவறாக வரைந்துவிட்டால் அழித்து விட்டு மீண்டும் தொடங்கலாம். அதேபோன்றே சுவரில் தவறாக வரைந்துவிட்டால் அதன் மேல் சாயம் பூசிவிட்டு மீண்டும் தொடங்கலாம்.
"சிங்கப்பூரில் நிறைய அழகிய கட்டடங்களும் இடங்களும் உண்டு. அவற்றிற்கு மேலும் அழகூட்ட, பர பரப்பான நமது வாழ்க்கையில் சில நொடிகள் நின்று ரசிக்க சுவரோவியங்கள் தேவை," என்றார் சங்கீதா.

