இந்திய சமூகத்தினருக்கு மனநலத் திட்டங்களையும் சேவைகளையும் வழங்கும் 'மெண்டல் ஆக்ட்' மன நல விழிப்புணர்வு அமைப்பு நடத்தும் இரண்டாம் மாநாடு, மெய்நிகர் வடிவில் இடம்பெற்று வருகிறது.
'இழுக்கை நீக்குதல், சமநிலை காணுதல்' என்ற கருப்பொருளுடன் இம்மாநாடு நான்கு சனிக்கிழமைகளாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 2ம் தேதி தொடங்கிய மாநாடு 23ம் தேதி நிறைவடையும்.
'இழுக்கை நீக்குதல், சமநிலை காணுதல்' எனும் கருப்பொருளைப் பற்றி விளக்கிய நிகழ்ச்சியின் செயலாக்கத் தலைவர் பிரியா ரவி, 24, மனநல உதவி நாடுவதை சமூகத்தில் சிலர் இழிவாகக் கருது வதால் பலர் உதவி பெறுவதைத் தவிர்ப்பதாகக் கூறினார்.
"மாநாட்டின் வழியாக விழிப்புணர்வை அதிகரித்து பங்கேற்பாளர்களின் திறன்களை வளர்ப்பது எங்கள் நோக்கமாகும். மனநலம் பாதிக்கப்பட்ட அன்புக்குரியோருக்கு எவ்வாறு உதவுவது, நினைத்ததைச் சொல்வதற்கான பாதுகாப்பான, சுமுகமானச் சூழலை எப்படி உருவாக்குவது போன்றவற்றை பங்கேற்பாளர்கள் தெரிந்துகொள்வர்," என்றார் பிரியா.
கடந்த 2ஆம் தேதி தொடங்கிய மாநாட்டில், சிறுபான்மையினரின் அனுபவம்', 'பழக்கங்களுக்கு அடிமையாகுதல்' எனும் தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
சிறுபான்மையினரின் அனுபவம் எனும் அமர்வில் பாகுபாடுகளுக்கு எதிரான கொள்கைகளையும் கல்வி, பயிற்சி போன்ற துறைகளில் சில சீர்திருத்தங்களையும் பேச்சாளர்கள் பரிந்துரைத்தனர்.
மாற்றுக் கருத்துகளைக் கேட்டறியும் திறன் வலுப்படுத்தப்படவேண்டும் என்றும் அது பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படுத்தி, தீர்வுகாண வழிகாட்டும் என்றும் பேச்சாளர் நஸ்ரத் ஃபாஹிமா தெரிவித்தார்.
மது அருந்துதல், போதைப் புழக்கம் போன்ற பலரும் அறிந்த பிரச்சினைகளைத் தாண்டி, மிகையான காதல் உணர்வு, மிகையான பாலி யல் உறவு போன்ற ஒருவரை அடிமையாக்கும் மாறுபட்ட பழக்கங்கள் பற்றியும் மாநாட்டில் பேசப்பட்டது.
சில நேரங்களில் இணையத்தில் காணப்படும் தவறான அறிவுரை களால் இளையர்கள் தவறான முடிவுகளை எடுப்பதாகக் கூறினார் ஓர் அமர்வில் பேசிய சமூகச் சேவைஊழியர் கீஷன் மேனன்.
வெளிப்படையான உரையாடலின்மூலம் அவர்கள் சரியான தீர்வு களை நாட முடியும் என்று இவர் குறிப்பிட்டார்.
பலவும் மேலோட்டமாகி விட்ட இன்றைய சூழலில், உணர்வுகளை மேம்பட்ட விழிப்புநிலையுடன் புரிந்து கொண்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது முக்கிய திறன் ஆகிவிட்டது.
நாம் நினைப்பதையும் உணர் வதையும் தெளிவாக, துல்லியமாக வெளிப்படுத்துவதே மேம்பட்ட விழிப்புநிலையுடன் தொடர்புகொள்வது என்று மாநாட்டில் பகிரப்பட்டது. மனதை அமைதிப்படுத்துதல், முன்னோக்கிச் சிந்தித்தல், காரணத்தைத் தெளிவுபடுத்திப் பேசுதல் போன்றவை நல்ல திறன்கள் என்றும் கூறப்பட்டது.
வரும் சனிக்கிழமை 23ம் தேதியன்று மாநாட்டின் ஒரு பகுதியாக மனித நூலகம்' எனும் மாநாட்டின் மற்றோர் அங்கம் நடைபெறும்.
'பைபோலார்', 'ஓசிடி' 'ஸ்கிட்ஸோஃபிரேனியா' போன்ற மன நலப் பிரச்சினைகள், பிறரைப் பராமரிப்பவர்கள் எதிர்நோக்கும் மன உளைச்சல் போன்ற அனுபவங்களை விவரிக்கும் 11 நூல்கள் அறிமுகம் செய்யப்படும்.
"மாநாட்டுக்கு விண்ணப்பித்த 200 பேரில் குறைந்தது 75% பேர் சிங்கப்பூர் இந்தியர்கள். பெரும்பாலானோர் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். மூத்தோர் பலரும் முன்வந்தது குறிப்பிடத்தக்கது," என்று நிகழ்ச்சியை வழி நடத்தும் குமாரி பிரியநிஷா, 29 தெரிவித்தார்.
மாநாட்டை இணையத்தில் நடத்துவது பங்கேற்பாளர்கள் பலருக்கு வசதியாய் உள்ளது என்றார் அவர்.
"நேரடியாக நடத்தப்படும் மா நாடுகளில் கலந்துகொள்ள வெட்கப்படும் சிலர், பெயரையும் முகத்தையும் மறைத்து இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதுவே உதவி நாடு வதற்குப் பலருக்கு ஊக்கத்தைத் தந்துள்ளது," என்றார் பிரியநிஷா.
செய்தி: கி.ஜனார்த்தனன்

