மூன்று பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 60 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவரும் பயணிகள் இருவரும் காயமடைந்தனர்.
அப்பர் பாய லேபார் சாலையில், ஹவ்காங் ஸ்திரீட் 11 புளோக் 160க்கு அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நேற்றுக் காலை இவ்விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து காலை 7.25 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காயமடைந்த பேருந்து ஓட்டுநரும் 72 வயது ஆடவரும் செங்காங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
இன்னொரு பயணிக்குக் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினர் முதலுதவி அளித்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்துச் சேவைகளின் எண்கள் 113, 24, 76 எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.


