குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 4,000க்கு மேற்பட்ட பாலர்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்குக் காலை வேளைகளில் இலவச தானிய உணவு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டம் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தின்
32 பாலர்பள்ளிகளிலும் அங் மோ கியோ, ஈசூனில் உள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர்பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கெல்லோக் நிறுவனம், சிங்கப்பூர் உணவு வங்கி, கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவை இத்திட்டத்தில் இணைந்துள்ளன என்று நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறிவித்தார்.
பாலர்பள்ளி மாணவர்களுக்குச் சத்துள்ள காலை உணவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.
"கெல்லோக் நிறுவனம், கிட்ஸ்டார்ட் திட்டத்தில் இணைந்திருப்பது, தனியார் துறை, மக்கள் துறை, பொதுத் துறை ஆகியவை இணைந்து பொதுவான நோக்கத்திற்காக எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்," என்றார் அமைச்சர்.
"நாளடைவில் பிள்ளைகளுக்கு காலை வேளைகளில் தரமான, சத்தான உணவளிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டு செயல்படுவதில் இத்திட்டம் நம்பிக்கை கொண்டுள்ளது," என்றார் கிட்ஸ்டார்ட் அமைப்பின் தலைமை நிர்வாகியான திருவாட்டி ரஹாயு புவாங்.

