அத்தியாவசிய நேரடி அழைப்பு நிலையங்களின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராகவும் அவ்வாறு செய்ய மற்றவர்களைத் தூண்டுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் தயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு உட்பட இதர அரசாங்க உதவிக்கான தொலைபேசி எண்களை அழைத்து அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் அழைப்புகள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
"அத்தியாவசிய உதவிகளுக்கான நேரடி அழைப்பு நிலையங்களின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல்," என்று சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு இவ்வாறு விளக்கம் அளித்தன.
"நாங்கள் இத்தகைய செயலை மிகக் கடுமையாகப் பார்க்கிறோம். அவ்வாறு தவறிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் போலிசுடனும் இதர அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவோம்," என்றும் அந்த அமைச்சுகள் கூறின.
கடந்த வாரம், பல்வேறு இணைய குறுஞ்செய்தித் தளங்கள், சுகாதார அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு உட்பட அரசாங்க உதவிக்கான நேரடித் தொலைபேசி எண்களுக்குத் தொடர்ந்து அழைக்குமாறு அதன் உறுப்பினர்களை டெலிகிராம் தளத்தில் கேட்டுக்கொண்டன.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைக் கடைத்தொகுதிக்குள்ளும் இதர பொது இடங்களுக்கும் செல்லத் தடைசெய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் பொய்யான நோக்கத்தில் அவை அவ்வாறு செயல்பட்டன.
"கருத்து தொடர்பான உங்கள் அழைப்புகள் அந்த தொலைபேசி அழைப்பு நிலையத்தின் மேலாளருக்குச் செல்லும்வரை விடாமல் முயற்சி செய்யுங்கள். அவர்களை உங்களுக்குத் திரும்ப அழைக்கச் சொல்லுங்கள். ஒருவேளை அவர்கள் அழைக்கவில்லை என்றால் நாளை மீண்டும் அழைத்து உங்கள் அழைப்புக்கான பதிலை உறுதியுடன் கேளுங்கள்," என்று அந்த தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் கூட்டு அறிக்கை வெளியிட்ட சுகாதார மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகள், "இந்த உதவிக்கான நேரடித் தொலைபேசி இணைப்புகள் உண்மையில் உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களை அடைய பயன்படுத்தப்படும் முக்கியமான வழிமுறை.
"ஆகவே, அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். உண்மையாக உதவி தேவைப்படுபவர் களுக்கு விரைவில் தொடர்பு கிடைப்பதில் நீங்கள் இடையூறாக இருக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்," என்றும் தெரிவித்தன.
இல்ல குணமடைதல் திட்டத்தில் உள்ளவர்கள் சில விவரங்களில் தெளிவுபெற சுகாதார அமைச்சின் உதவிக்கான நேரடித் தொலைபேசி எண்ணுக்கு பலமுறை அழைத்தும் அழைப்புக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அமைச்சிடம் புகார் தெரிவித்தனர்.
"ஒவ்வொருநாளும் உதவி தேவைப்படுவோரிடமிருந்து அதிக அளவிலான அழைப்புகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், இப்படிப்பட்ட பொய்யான அழைப்புகள் உண்மையாக உதவி தேவைப்படுவோரின் வாய்ப்புகளுக்குத் தடையாக இருக்கின்றன," என்றும் அவ்விரு அமைச்சுகளும் வலி யுறுத்திக் கூறின.

