தவறான புரிதலால் ஆபத்தை எதிர்நோக்கக்கூடிய வட்டாரங்களில் நிலைத்தன்மையைக் கொண்டு வரும் சக்தியாக ஐந்து நாடுகள் தற்காப்புக் கூட்டணி செயல்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தெரிவித்தார்.
ஐந்து நாடுகள் தற்காப்புக் கூட்டணி அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டதை அவர் சுட்டினார்.
இருப்பினும், சிங்கப்பூரின் தற்காப்புத் தேவைகளை இக்கூட்டணி தொடர்ந்து பூர்த்தி செய்துவருவதாக அவர் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையிலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் தொடர்ந்தது என்று அமைச்சர் இங் தெரிவித்தார்.
கூட்டணியைச் சேர்ந்த ஐந்து நாடுகளின் கடப்பாட்டை இது பிரதி பலிப்பதாக அவர் கூறினார்.
1971ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இக்கூட்டணி ஏற்பாட்டில் கையெழுத்திட்டன.
கடந்த சில ஆண்டுகளில் வழக்கத்துக்கு மாறான மிரட்டல்களை எதிர்கொள்வது, மனிதாபிமான உதவிகளில் ஈடுபடுவது, இயற்கைப் பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றில் ஒத்துழைப்பு வழங்கும் அளவுக்கு கூட்டணி வளர்ச்சி கண்டுள்ளது.
கூட்டணி அமைக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.
"எந்த ஒரு நாட்டிற்கும் நாங்கள் மிரட்டல் விடுக்கவில்லை. இந்தக் கூட்டணி இவ்வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை நிலவ ஒன்றிணைந்து செயல்படுகிறது.
கூட்டணி நாடுகளின் போர் விமான சாகசக் காட்சி, கடற்
படைகளின் கப்பல்கள் அணிவகுப்பு ஆகியவற்றைப் பார்த்த பிறகு மரினா அணைக்கட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் இங் பதிலளித்தார்.
அவருடன் சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதர் காரா ஓவன், சிங்கப்பூருக்கான ஆஸ்திரேலியத் தூதர் வில்லியம் ஹோக்மன், சிங்கப்பூருக்கான நியூசிலாந்துத் தூதர் ஜொவேன் டின்டல், சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் ஆஸ்ஃபர் முகம்மது முஸ்தபா ஆகியோரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் அல்லது மலேசியா தாக்கப்பட்டால் கூட்டணி ஏற்பாட்டின்கீழ் அதில் உள்ள நாடுகளின் ராணுவம் தலையிடத் தேவைஇல்லை.
மாறாக, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணியில் உள்ள நாடுகள் உடனடியாகக் கலந்துரையாட வேண்டும் என்று அமைச்சர் இங் கூறினார்.
இந்த வட்டாரத்தில் பாதுகாப்புச் சூழலுக்கு இது பொருத்தமானது என்றார் அவர்.
"இது ஓர் அமைதியான வட்டாரம். வன்முறை நிகழும் ஆபத்து என ஒன்றிருந்தால் பயங்கரவாதம் போன்றவற்றால்தான் ஏற்படக்
கூடும். நாடுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டு போர் ஏற்படும் அபாயம் இல்லை. பாதுகாப்பு தொடர்பாக நாம் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்க ஐந்து நாடுகள் தற்காப்பு ஏற்பாடு போதுமானது.
"ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழாது என்று கூறிவிட முடியாது. இருப்பினும், நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்
கிறோம் என நம்புகிறோம். புரிந்துணர்வை வலுப்படுத்த அமைதிக் காலங்களிலும் பயிற்சியை மேற்கொள்கிறோம்," என்று அமைச்சர் இங் தெரிவித்தார்.

