நீச்சல் குளத்தில் 5 வயது சிறுமி மூழ்கி மாண்டதை சோகமான, துரதிர்ஷ்ட சம்பவம் என மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தீர்ப்பளித்துள்ளார்.
ஔரேலியா லியூ ஜியாபாவின் மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஃபேரர் சாலை அருகில் உள்ள தங்களது தி அசானா கொண்டோமினியத்தின் நீச்சல் குளத்துக்கு 1.06 மீட்டர் உயரமுள்ள ஔரேலியாவும் அவரது தாயாரான திருவாட்டி லூ யிங்கும் சென்றனர்.
1.2 மீட்டர் ஆழம் கொண்ட பெரியவர்களுக்கான நீச்சல் குளம் அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
0.8 மீட்டர் ஆழம் கொண்ட ஜக்கூசியில் ஔரேலியா விளையாடிக்கொண்டிருந்தார்.
6.10 மணி அளவில் திருவாட்டி லூ கழிவறைக்குச் செல்ல வீடு திரும்பினார். 6.31 மணி அளவில் திருவாட்டி திரும்பியபோது பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தின் அடியில் ஔரேலியா இருந்ததைக் கண்டுபிடித்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஔரேலியாவுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.