எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 12.3% ஏற்றம்
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த மாதம் 12.3 விழுக்காடு அதிகரித்தது. மின்னணுவியல், மின்னணுவியல் சாரா ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி இதற்குப் பங்களித்ததாகக் கூறப்படுகிறது. விநியோக இடையூறு தொடர்பாக ஏற்பட்ட அக்கறைகள், சீனாவின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைதல் போன்றவற்றையும் தாண்டி சிங்கப்பூரில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றமதி அதிகரித்தது.
சிங்கப்பூரில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றமதி கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் தெரிவித்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது 2.7 விழுக்காடு உயர்ந்தது. இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஏற்பட்டு வரும் வளர்ச்சியில் ஆகக் குறைவானது.
மின்னணுவியல் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 14.4 விழுக்காடு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுக்கான ஏற்றுமதி ஏழு விழுக்காடு அதிகரித்தது. கணினி, தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான ஏற்றமதி தலா 45.4 விழுக்காடு ஏற்றம் கண்டன.
மனைவியைத் துன்புறுத்திய ஆடவருக்குச் சிறை
மனைவியை அடித்துத் துன்புறுத்திய 32 வயது ஆடவருக்கு 10 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் அவர் தமது மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனைவியைத் தாக்கியது, மனைவியின் மகனை வேனிலிருந்து வெளியே தள்ளி காயம் விளைவித்தது ஆகிய குற்றங்களை அந்த விநியோக ஓட்டுநர் ஒப்புக்கொண்டார்.
அந்த ஆடவர் தமது மனைவியை அடித்து, கீழே தள்ளிவிட்டதில் அப்பெண் சுயநினைவு இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தீர்ப்பளிக்கப்பட்டபோது இந்தக் குற்றச்செயலும் கருத்தில் கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், அவரது பிள்ளைகள் ஆகியோரின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றங்கள் நிகழ்ந்தபோது அப்பிள்ளைகள் இரண்டு வயதிலிருந்து எட்டு வயதுக்கு உட்பட்டிருந்தனர்.
துணைப்பாட வகுப்பு முகவைக்கு $10,000 அபராதம்
மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக துணைப்பாட வகுப்பு முகவையான சாம்பியன்டியூட்டர் நிறுவனத்துக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தனிப்பட்ட விவரங்கள் கசிவு தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது இணையப்பக்கத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைச் சரிசெய்ய அந்த முகவை தவறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாணவர்களின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவை கசிந்து 'டார்க் வெப்'புக்கு விற்கப்பட்டதாக தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையே, 9,983 பேரின் தனிப்பட்ட விவரங்கள் வெளியே கசிந்ததற்காக ஸ்டைல்லெக்ஸ் எனும் நிறுவனத்துக்கு $37,000 அபராதம் விதிக்கப்பட்டது.
'ஃபெங்ஷுவேய் மாஸ்டர்' சொல் கேட்டு மகளைச் சீரழித்த ஆடவர்
கன்னிப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டால் உயிருக்கு வரும் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்று மலேசியாவில் உள்ள ஃபெங்ஷுவேய் மாஸ்டர் ஒருவர் கூறியதைக் கேட்டு தமது 11 வயது மகளை சிங்கப்பூரர் ஒருவர் சீரழித்தார்.
அந்த 50 வயது ஆடவருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாலியல் குற்றங்களை அந்த ஆடவர் புரிந்தார்.
வயது காரணமாக பிரம்படி விதிக்கப்பட முடியாததால் அவருக்குக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

