கொவிட்-19 சமூக சிகிச்சை வளாகங்களில் உதவி புரிவதற்காக சிங்கப்பூர் ஆயுதப் படைகள் (எஸ்ஏஎஃப்) அதன் 70 பணியாளர்களை அனுப்பும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
மருத்துவ, தாதிமை, நிர்வாகப் பிரிவுகளைச் சேர்ந்த இந்த 70 பேரும், கொவிட்-19க்கு எதிராக சிங்கப்பூர் தொடுத்துள்ள போரில் இதுவரையிலான ராணுவத்தின் பங்கை ஒரு படி மேலே உயர்த்துவர் என்று கூறப்படுகிறது.
"இது தேசிய அளவிலான ஒரு முயற்சி. இதற்காக சிங்கப்பூர் ஆயுதப் படைகள் அதன் பங்கை ஆற்றும்," என்று பதிவில் திரு இங் குறிப்பிட்டிருந்தார். வரும் மாதங்களில் உட்லண்ட்ஸ் ஹெல்த் மற்றும் டான் டோக் செங் மருத்துவமனையுடன் எஸ்ஏஎஃப் இணைந்து செயல்படும் என்றார் அவர். எஸ்ஏஎஃப் பணியாளர்கள் உதவிக்கரம் நீட்டும் அவ்விரு கொவிட்-19 சிகிச்சை வளாகங்கள் யாவை என்று அமைச்சர் குறிப்பிடவில்லை.
மருத்துவப் பராமரிப்பு தேவைப்படாத நிலையில் உள்ள கொவிட்-19 நோயாளிகளை அந்த இரு வளாகங்களும் அனுமதிப்பதால் மருத்துவமனைகள் மீதுள்ள அழுத்தம் குறையும் என்றார். கடந்த பல வாரங்களாக கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் மருத்துவமனை ஊழியர்களுக்குத் தாளா அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.
கொவிட்-19 நோயாளிகள் தங்குவதற்காகப் புதிதாக ஏற்படுத்தித் தரப்பட்டவை, இந்த சமூக சிகிச்சை வளாகங்கள். கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மூத்தோர், நலமாக இருந்தும் வேறு மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் இந்த வளாகங்கள் ஏற்புடையதாக இருக்கும். இதுபோன்ற முதல் வளாகம் கடந்த மாதம் தெம்பனிஸ் வட்டாரத்தில் அமைக்கப்பட்டது. அதையடுத்து, மேலும் நான்கு வளாகங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.
இந்த வளாகங்கள், கிட்டத்தட்ட 1,200 படுக்கைகளைக் கொண்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 3,700ஐத் தொடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வீடு தேடிச் செல்லும் நடமாடும் தடுப்பூசித் திட்டம், வீட்டில் இருந்தவாறு குணமடையும் திட்டம் போன்ற மற்ற கொவிட்-19 திட்டங்களுக்கும் எஸ்ஏஎஃப் பங்காற்றி வருகிறது.
"சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், நம் நாயகர்கள். ஆனால், அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் அவர்களின் மனநலனும் உடல்நலனும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது அவர்களுக்கு நமது ஆதரவும் உதவியும் தேவைப்படுகிறது," என்றார் டாக்டர் இங்.

