சிங்கப்பூரில் தடுப்பூசி அடிப்படையிலான வெவ்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் கொவிட்-19க்கு எதிரான தங்களது முதல் தடுப்பூசியையும் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள மேலும் பலர் முன்வந்துள்ளனர்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், அக்டோபர் 9 முதல் 15 வரை ஏறத்தாழ 17,000 பேர் தங்களது முதல் தடுப்பூசியையும் 162,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
இதற்கு ஒப்புநோக்க, அக்டோபர் 2 முதல் 8 வரை தங்களது முதல் தடுப்பூசியை ஏறக்குறைய 11,000 பேரும் பூஸ்டர் தடுப்பசியைக் கிட்டத்தட்ட 135,000 பேரும் போட்டுக்கொண்டனர்.
உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவருந்தவும் கடைத்தொகுதிகள் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு அக்டோபர் 9ஆம் தேதியன்று அறிவித்தது.
சமூகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைப் பாதுகாக்கவும் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் மீதுள்ள அழுத்தத்தைக் குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பணிக்குழு கூறியிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அன்றாடத் தொற்று 3,000க்கு மேல் பதிவாகி வந்தது.
அறிவிப்பு செய்யப்பட்ட அதே நாளில், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் தங்களின் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பதிந்துகொள்ளலாம் என்ற அழைப்பும் விடுக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக செப்டம்பர் 15 முதல் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ளவர்களும் இம்மாதம் 3ஆம் தேதியிலிருந்து 50 முதல் 59 வயதினர் தங்களின் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி தொடர்பான சிறப்புப் பயணத் தடத் திட்டம் (விடிஎல்) குறித்து பணிக்குழு அறிவித்ததுடன் 11 நாடுகளுக்குத் தனிமை உத்தரவு காலம் ஏதுமின்றி சிங்கப்பூரர்கள் வந்து போகலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், உணவுக்கடைகளில் அமர்ந்து சாப்பிடவும் விடிஎல் திட்டத்தின் கீழ் பயணம் செய்யவும் தங்களின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வந்துள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

