செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
19f66f8f-9631-4142-812b-7b6483769801
-
Google News Preferred Icon

கட்டுமானத் தளங்களில் ஸ்கேன் செய்யும் பணியில் 'ஸ்போட்'

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பூங்காவில் இருந்தோருக்கு நினைவூட்டும் பணியில் 'ஸ்போட்' எனப்படும் இயந்திர நாய் கடந்த ஆண்டு ஈடுபட்டது.

தற்போது அதற்குப் புதிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. கட்டுமானத் தளங்களில் கட்டப்படும் கட்டடப் பகுதிகளை ஒளிக்கதிர் மூலம் ஸ்கேன் செய்து 5ஜி கட்டமைப்பு மூலம் முடிவுகளை அது அனுப்பிவைக்கும்.

'ஸ்போட்' அனுப்பிவைக்கும் முடிவுகளைக் கொண்டு வடிவமைப்புக்கு ஏற்ப கட்டடங்கள் கட்டப்படுகின்றனவா என்பது சரிபார்க்கப்படும்.

இந்த 5ஜி@செந்தோசா திட்டத்தை GovTech எனும் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு நேற்று தொடங்கி வைத்தது. செந்தோசாவில் முன்னோட்டம் செய்து வெற்றி காணும் 5ஜி திட்டங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்துவதே திட்டத்தில் இலக்கு. ஸ்போட்டுக்குத் தரப்பட்டுள்ள பணி மிகவும் முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொவிட்-19 நெருக்கடிநிலை போன்ற சூழல் ஏற்படும்போது வேலையிடங்களுக்கு நேரில் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். அத்தகைய சூழல் ஏற்படும்போது வேறோர் இடத்தில் இருந்துகொண்டு பணிகள் திட்டமிட்டபடி சரியாக நடக்கின்றனவா என்பதை இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உறுதி செய்யலாம்.

அதிகரிக்கும் செலவு;

சிங்கப்பூர் நிறுவனங்கள் கவலை

செலவினம் குறித்து 1,058 சிங்கப்பூர் வர்த்தகங்களிடம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11 தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வை சிங்கப்பூர் சீன வர்த்தகத் தொழிற்சபை நடத்தியது. ஆய்வில் பங்கெடுத்த வர்த்தகங்களில் 92 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவற்றில் பெரும்பாலானவை சேவைத் துறையைச் சேர்ந்தவை. மற்றவை உற்பத்தி, கட்டுமானத் துறைகளைச் சேர்ந்தவை.

இவ்வாண்டு செலவினம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் பங்கெடுத்த வர்த்தகங்களில் ஏறத்தாழ 57.3 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு இந்த விகிதம் 28.8 விழுக்காடாக இருந்தது. இவ்வாண்டுக்கான வருமானம் குறையும் எனக் கிட்டத்தட்ட 47.2 விழுக்காடு வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன. கடந்த ஆண்டில் இந்த விகிதம் 80.3 விழுக்காடாக இருந்தது.

இருப்பினும், இவ்வாண்டில் இழப்பு ஏற்படும் என்று 40 விழுக்காடு வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் கூடுதல் இழப்பு ஏற்படும் என்று இவற்றில் ஏறத்தாழ 50 விழுக்காடு வர்த்தகங்கள் கவலை தெரிவித்தன.

நவம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம்

அடுத்த மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் தெரிவித்துள்ளார்.