சிங்கப்பூரை தளமாகக் கொண்ட எண்ணெய் வர்த்தக நிறுவனம் ஒன்று அனைத்துலக நாடுகளின் தடைகளை மீறி வடகொரியாவுக்கு எரிபொருள் வழங்கியதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அந்தக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கையை போலிஸ் ஆராய்ந்து வருகிறது.
ஐ.நா. சபையின் தீர்மானங்களின் கீழ் சிங்கப்பூர், ஐநாவின் குற்றச்சாட்டைக் கடுமையாக நோக்கி, தனது கடமைகளைச் செவ்வனே செய்து வருகிறது என்று போலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
"நிறுவனங்கள் சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்," என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தை போலிஸ் தொடர்புகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வின்சன் குரூப் என்னும் நிறுவனம் வடகொரியாவுக்கு சட்டவிரோதமாக எரிபொருள் வழங்கி வந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் தனது 261 பக்க அறிக்கையில் கூறியுள்ளது.
சிங்கப்பூரரான டோனி டங் என்பவரால் நிறுவப்பட்ட வின்சன் குரூப் நிறுவனம் குறித்து ஐநா இம்மாதத் தொடக்கத்தில் செப்டம்பர் 8 எனத் தேதியிடப்பட்ட அந்த அறிக்கையை வெளியிட்டது.
ஐநா அறிக்கையில் கூறியபடி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை வின்சன் குரூப் மறுத்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், மனிதநேய மேம்பாடு மற்றும் வடகொரியாவின் கண்டம் விட்டுக் கண்டாம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் ஆகியவை குறித்தும் கூறப்பட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
வடகொரியாவின் சட்டவிரோத எரிபொருள் கொள்முதல் நடவடிக்கைகளில் முக்கியமான நிறுவனமாக இருப்பது வின்சன் குரூப் நிறுவனம் என்று பல்வேறு அமைப்புகளும் ஆய்வுகளும் கூறுவதை ஐநா அதன் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.
சில குற்றச்சாட்டுகளில் உலகம் முழுதும் இருந்து வடகொரியாவுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஆட்கள் ஆகியோரிடம் வின்சன் நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வின்சன் மறுத்து வருகிறது.
1998ல் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட வின்சன் நிறுவனம் இப்போது ராஃபிள்ஸ் ஒன் கட்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஹாங்காங், தைவான், சீனா, துபாய் ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிறுவனம் அனைத்துலக எண்ணெய் வர்த்தகம், எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் முனையவசதிச் சேவைகளை வழங்கி வரும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.

