தனியார் வாடகைக் கார் நிறுவனமான 'ரைட்' தனது சேவைக்குப் பதிந்து பின்னர் அதை ரத்து செய்யும் அல்லது தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரத்து மற்றும் தாமதக் கட்டணமாக $4.30ஐ வசூலிக்கப்போவதாக நேற்று தெரிவித்தது.
தாமதக் கட்டணம் வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. தங்கள் நிறுவனத்தின் ஓட்டுநர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று அந்நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பயணியின் இடம்தேடிச் செல்லும் போது பாதிவழியில் அந்தச் சேவை வேண்டாம் என்று ரத்துச் செய்யப்பட்டால் ஓட்டுநரின் நேரம் வீணாகிறது. அதனால் அவர் நட்டத்தை எதிர்கொள்கிறார்.
எனவே, ஓட்டுநர்களின் நட்டத்தை ஈடுகட்டும் வகையில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
பயண நேரம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் அதை பயணிகள் ரத்துச் செய்தாலோ அல்லது வாடகைக் கார் வரும் இடத்திற்கு நான்கு நிமிடங்களுக்குள் வந்துவிட்டோலோ ரத்து அல்லது தாமதத்திற்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டா. 'ரைட்' நிறுவனத்தைப் போல் கிராப், கோஜெக் ஆகிய நிறுவனங்களும், பயணச் சேவையை ரத்துச் செய்யும் பயணிகளிடம் இருந்து $4 வெள்ளி வசூலிக்கின்றன.

