தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுயமாக ‘ஆன்டிஜன்’ விரைவுப் பரிசோதனையை இரு வாரங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நவம்பர் விடுமுறையில் பள்ளிகள் மூடப்படும் வரை கொவிட்-19 சோதனையைத் தொடர வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதன் தொடர்பில் பெற்றோருக்கும் காப்பாளர்களுக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை நேற்று கல்வி அமைச்சு அனுப்பிவைத்தது.அதில், வரும் திங்கட்கிழமையிலிருந்து ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ‘ஏஆர்டி’ சோதனைக் கருவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, மாணவர்கள் அதிகமாக ‘ஏஆர்டி’ பரிசோதனைக் கருவி களை வாங்க வேண்டியதில்லை.
கொவிட்-19 பரிசோதனையை சுயமாக செய்துகொள்வதால் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பை உணர்த்த முடியும் என்றும் பள்ளிகளைக் கற்றலுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
விடுமுறைக்கு முன்பு மாண வர்கள் இரண்டு முறை பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முதல் சோதனையையும் நவம்பர் 14ஆம் தேதிக்குள் இரண்டாவது சோதனையையும் மாணவர்கள் செய்ய வேண்டும்.
பெற்றோரும் காப்பாளரும் மாணவர்கள் பரிசோதனை செய்யும்போது உடன் இருந்து உதவி செய்வது அவசியம் என்று கல்வி அமைச்சு கூறியது.
பரிசோதனை முடிவுகளை பள்ளிகள் வழங்கிய தொடர்பு மூலம் பெற்றோர் தெரிவிக்கலாம்.
தொற்று இருப்பது உறுதியானால் உடனே வகுப்பு ஆசிரியர் மூலம் பள்ளிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
தொற்று இருப்பது உறுதியாகி உடல் நலமில்லாமல் இருந்தால் அவர்கள் ‘பிசிஆர்’ சோதனைக்கு ஆயத்தநிலையில் உள்ள மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். அதே சமயத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு உடல்நலம் பாதிக்கப்படாமல் இருந்தால் ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்யும்வரை 72 மணி நேரத்திற்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘ஏஆர்டி’ சோதனையில் தொற்று இல்லை என்பது தெரிந்தால் தனிமையை முடித்துக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.