'சிஓஇ' சான்றிதழ் கட்டணங்கள் அனைத்துப் பிரிவுகளிலும் உயர்வு
நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்துக்கான ஆகக் கடைசி ஏலக் குத்தகையில், 1,600 சிசிக்கு உட்பட்ட கார்களுக்கான கட்டணம் $47,001லிருந்து $52,709க்கு உயர்ந்தது. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $70,200லிருந்து உயர்ந்து $80,210 ஆனது. பொதுப் பிரிவு கார்களுக்கான கட்டணம் $72,756லிருந்து $85,000க்கு ஏற்றம் கண்டது. பேருந்துகளை உள்ளடக்கிய வர்த்தகப் பிரிவு வாகனங் களுக்கான கட்டணம் $38,890லிருந்து $40,501க்கு உயர்ந்தது. மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ் கட்டணம் $9,052லிருந்து உயர்ந்து $9,310 ஆனது.
மோட்டார் சைக்கிள் 'ஐயு' கருவியை காருக்குள் பொருத்தியவருக்குச் சிறை
தனது மோட்டார் சைக்கிளில் உள்ள 'ஐயு' கருவியை எடுத்து தனது காருக்குள் பொருத்தி, அதன் மூலம் குறை வான வாகன நிறுத்தும் கட்டணத்தைச் செலுத்தி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) ஆகியவற்றை ஏமாற்றிய 41 வயது கோ ஸி ஸாவுக்கு மூன்று மாதச் சிறை விதிக்கப்பட்டது. அவர் இக்குற்றத்தை 2018 செப்டம்பர் 2ஆம் தேதியிலிருந்து 2019, மே 21ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வீவக வாகன நிறுத்தும் பேட்டைகளில் 545 முறை புரிந்து உள்ளார். இந்தச் செயல்கள் மூலம் கோ, வீவக, யுஆர்ஏ ஆகியவற்றுக்குச் செலுத்தவேண்டிய $3,400 மதிப்பிலான வாகன நிறுத்தும் கட்டணங்களைச் செலுத்தவில்லை. புக்கிட் பாஞ்சாங், செஞ்சா ரோட்டில் உள்ள வாகன நிறுத்தும் பேட்டையில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதை நிர்வகிக்கும் எஸ்டி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தணிக்கை செய்தபோது இந்தக் குற்றங்கள் வெளிச் சத்துக்கு வந்தன. கோ, தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதுடன், $3,400 கட்டணங்களையும் கடந்த மாதம் 3ஆம் தேதியன்று அவ்விரு அமைப்புகளிடம் செலுத்தி விட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடற்குறையுள்ளோரைப் பராமரிப்போர் உதவித் திட்டம் அறிமுகம் காண்கிறது
உடற்குறை உள்ளோரைப் பராமரிப்போருக்கு உதவும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம் காண இருப்பதாக சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார். அந்தப் புதிய 'கம்யூனிட்டி சர்கிள்ஸ்' திட்டத்தை எஸ்ஜி எனேபிள், கேரிங்எஸ்ஜி, கொள்கை ஆய்வுக் கழகம் ஆகியன இணைந்து வழிநடத்தும். உடற்குறை உள்ளோரைப் பராமரிக்க தங்களது நேரத்தையும் உழைப்பையும் செலவழிப்போர் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு தனிமைத் துன்பத்தில் சிக்குகின்றனர். அவர்களின் அந்த சிரமங்களைப் போக்க இத்திட்டம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

