'பிஎம்இ' ஊழியர்க்கு ஆதரவு; எம்பிளாய்மண்ட் பாஸ் முறையை கடுமையாக்க கோரிக்கை

'பிஎம்இ' ஊழியர்க்கு ஆதரவு; எம்பிளாய்மண்ட் பாஸ் முறையை கடுமையாக்க கோரிக்கை

2 mins read
b737ea5b-3f4a-40e3-865d-62d82463d9b8
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வேலை இல்லாதோர் புதிய வேலைகளைப் பெறுவதற்கு ஏதுவாக நிதி உதவி உள்ளிட்ட ஆதரவு ஏற்பாடு தேவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஏற்பாட்டில் உதவியும் துணை வருவாய் நிவாரணமும் கிடைக்க வேண்டிய ஓர் அடிப்படை அம்சம் இருக்கவேண்டும்.அதோடு, தொழிற்சங்க உறுப்பினர்கள், எளிதில் பாதிக்கப்படுவோர், முதிர்ச்சியடைந்த ஊழியர்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கும் வகையில் கூடுதல் அம்சம் ஒன்றும் அந்த ஏற்பாட்டில் இடம்பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் (பிஎம்இ) ஆகியோருக்கு உதவுவதற்கு உரிய மேலும் சிறந்த வழிகளைக் காண ஓராண்டு காலம் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகிய இரண்டையும் சேர்ந்த ஒரு சிறப்புப் பணிக்குழு ஏறத்தாழ 10,000 ஊழியர்களை, நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கி அந்த கலந்துரையாடல் தொடரை நடத்தியது. அதையடுத்து, தொழிலாளர் இயக்கம் ஒன்பது பரிந்துரைகளை இன்று வெளியிட்டது.

பரிந்துரைகளை வெளியிட்டுப் பேசிய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பிஎம்இ ஊழியர்கள், வெளிநாட்டினரிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்நோக்குகிறார்கள் என்று தெரிவித்தார்.

இத்தகைய மூத்த ஊழியர்களைப் பொறுத்தவரை, வேலைஇழந்துவிட்டால் மீண்டு வருவதும் பெரும் சவாலாக இருக்கிறது என்றார் அவர். ஆகையால் உள்ளூர் பிஎம்இ ஊழியர்களுக்கு உதவ மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும். அதேவேளையில், வேலை நியமனம், வேலை கிடைக்கும் அளவுக்குத் தகுதியை உயர்த்தி கொள்வது ஆகியவை போன்ற ஆதரவும் அவர்களுக்குத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

வேலை இல்லாதோருக்கான உத்தேச ஆதரவுத் திட்டத்தின் அளவு, நிபந்தனைகள், சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக முத்தரப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் சிறப்புப் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

வேலை இல்லாதோருக்கான ஆதரவை எப்போது, எந்த அளவுக்கு, எவ்வளவு காலத்திற்கு வழங்குவது என்பவை போன்ற மேலும் பல அம்சங்களை ஆராய வேண்டும் என்று தொழிற்சங்க உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே கருத்துரைத்தார்.

இத்தகைய ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங் களுக்கு 50 விழுக்காடு அளவுக்கு ஆறு மாத காலத்திற்குச் சம்பள ஆதரவை அரசாங்கம் தர வேண்டும் என்றும் பணிக்குழு பரிந்துரைத்து உள்ளது.

மேலும், எம்பிளாய்மண்ட் பாஸ்தாரர்களுக்கான விண்ணப்ப நடைமுறையை மறுபரிசீலனை செய்வதன் மூலம் சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக் கொண்ட ஊழியர் அணியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதற்கான பரிந்துரைகளை குழு முன்னுரைத்தது.

வேலையைப் பொறுத்து வெளிநாட்டினருக்கான அனுமதி வேறுபட்டு இருக்கவேண்டும்; வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து உள்நாட்டு பிஎம்இ ஊழியர்களுக்குத் தேர்ச்சிகள் கிடைப்பதற்கான வழிவகைகளையும் நிறுவனங்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். மனிதவளத் தரங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.