சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக அக்டோபர் மாதம் மட்டும் 169 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த 18 மாதங்களில் கொரோனாவால் நிகழ்ந்த மொத்த மரணங்களைக் காட்டிலும் அக்டோபர் மாத எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது, உருமாறிய 'டெல்டா' கிருமியின் வீரியத்தையும் தடுப்பூசி போடாதோரிடையே அது ஏற்படுத்திவரும் தாக்கத்தையும் காட்டுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதியன்று சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் முதல் உயிரிழப்பு பதிவானது. அன்றைய நாளில் 75 வயது மூதாட்டி ஒருவர் கிருமித்தொற்றால் மாண்டார். அன்று தொடங்கி, நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று காரணமாக 264 பேர் மாண்டுவிட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரை ஒப்புநோக்க, தடுப்பூசி போடாதோர், கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட 8.5 மடங்கு அதிகம் என்று இம்மாதப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் கொரோனா கிருமி தொற்றி இறந்தோரின் விகிதத்தை, இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கிருமி தொற்றி மாண்டோரின் விகிதத்துடன் ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை பெறப்பட்டது.
முன்னதாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோரைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், கொரோனா கிருமி தொற்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட அல்லது உயிரிழக்கும் சாத்தியம் 14 மடங்கு அதிகம் என்று இம்மாதத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருந்தார். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நால்வரில் மூவர், ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஆவர்.
இம்மாதம் உயிரிழந்த 169 பேரில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் 84 பேர், ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 30 பேர் என்று அறியப்படுகிறது.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக ஒரே நாளில் கொவிட்-19 கிருமித்தொற்றால் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். நேற்று முன்தினம் இறந்த இந்த 18 பேரும், 55 வயதுக்கும் 96 வயதுக்கும் உட்பட்டவர்கள். நேற்று முன்தின நிலவரப்படி கொரோனா தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை 264ஆக அதிகரித்துவிட்டது.
இதற்குமுன் இம்மாதம் 14ஆம் தேதியன்று 15 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்ததே ஒரு நாளில் பதிவான ஆக அதிக உயிரிழப்பு எண்ணிக்கை ஆகும்.
மாண்ட 18 பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் எண்மர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.