கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவருவதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கென 5,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இம்மாதத் தொடக்கத்திலிருந்து பெரிய தங்குவிடுதிகளில் அமைந்துள்ள மையப்பகுதி வளாகங்களில் இந்தப் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 48 தங்குவிடுதிகளில் குணமடைவதற்காக உள்ள வளாகங்களில் மேலும் 6,000 படுக்கைகள் உள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறித்து மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் ஆகியோர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளிலும் அதிகளவு தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
குணமடைவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களின் படுக்கைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் தங்கலாம். அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும் அவை மிதமாகவே இருக்க வேண்டும்.
மையப்பகுதி வளாகங்களில் தங்கி, 7,900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீண்டு தங்குவிடுதிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும் டாக்டர் கோ தெரிவித்தார்.

