அரசாங்க நிதி பெற்ற பள்ளிகளில் படிக்கும் சிங்கப்பூர் குடியுரிமை இல்லாத மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணங்கள் அடுத்த ஆண்டு உயரும்.
வரும் 2022ஆம் ஆண்டிலும் 2023ஆம் ஆண்டிலும் நிரந்தரவாசிகள் செலுத்தும் மாதாந்திரப் பள்ளிக் கட்டணம் $25 முதல் $60 வரை கூடும்.
அனைத்துலக மாணவர்கள், படிக்கும் வகுப்புகளைப் பொறுத்து அவர்கள் $25 முதல் $150 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டி யிருக்கும். கல்வி அமைச்ச இதை நேற்று தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு, 2023ஆம் ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கட்டண உயர்வு நடப்புக்கு வரும்.
பள்ளிக் கட்டணங்களுக்கான வழக்கமான மறுஆய்வின்படி மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் பெற்றோர் திட்டமிட உதவும் பொருட்டு இத்தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு கூறியது.
தொடக்கப் பள்ளிக் கட்டணம்
தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் நிரந்தரவாசி மாணவர்களுக்கான தற்போதைய மாதாந்திரக் கட்டணம் $205 ஆகும்.
அடுத்த ஆண்டு இக்கட்டணம் மாதம் $230 ஆகவும் 2023இல் மாதம் $255 ஆகவும் அதிகரிக்கும்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்களுக்கு 2022இல் மாதாந்திரப் பள்ளிக் கட்டணம் $490 ஆகவும் 2023இல் $515 ஆகவும் உயர்த்தப்படும்.
இவர்கள் தற்போது மாதம் $465 செலுத்தி வருகின்றனர்.
ஆசியான் தவிர மற்ற நாடு களைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது மாதம் $775 செலுத்தி வருகின்றனர். அடுத்தாண்டு அந்தக் கட்டணம் மாதம் $825 ஆகவும் 2023இல் மாதம் $875 ஆகவும் உயரும்.
உயர்நிலைப் பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் நிரந்தரவாசிகள் தற்போது மாதம் $380 பள்ளிக் கட்டணம் செலுத்துகின்றனர்.
அடுத்த ஆண்டு இந்தக் கட்டணம் மாதம் $440 ஆகவும் 2023இல் மாதம் $500 ஆகவும் உயரும்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்களுக்கான மாதாந்திரக் கட்டணம், 2022இல் $840 ஆகவும் 2023இல் $900 ஆகவும் கூடும்.
ஆசியான் தவிர பிறநாட்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தற்போது மாதம் $1,450 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு அந்தத் தொகை மாதம் $1,600 ஆகவும் 2023இல் மாதம் $1,750 ஆகவும் அதிகரிக்கப்படும்.
புகுமுக வகுப்பு மாணவர்கள்
புகுமுக வகுப்புகளில் பயிலும் நிரந்தரவாசிகள் தற்போது மாதாந்திரக் கட்டணமாக $460 செலுத்துகின்றனர். அடுத்த ஆண்டு இக்கட்டணம் மாதம் $520 ஆகவும் 2023இல் மாதம் $580 ஆகவும் உயரும்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான மாதாந்திரக் கட்டணம், 2022இல் 1,040 வெள்ளியாகவும் 2023இல் 1,100 வெள்ளியாகவும் உயரும்.
ஆசியான் தவிர பிறநாட்டு மாணவர்களுக்குத் தற்போது மாதம் $1,800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2022இல் அக்கட்டணம் மாதம் $1,950 ஆகவும் 2023இல் மாதம் $2,100 என்றும்அதிகரிக்கப்படும்.
சிங்கப்பூரர்களுக்கானப் பள்ளிக் கட்டணங்களில் மாற்றமில்லை என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரர் இல்லாத மாணவர் களுக்கானப் பள்ளிக் கட்டணங்கள் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகின்றன.

