சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இணைய ஊடுருவல் நடந்ததைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு தேடி அதில் பதிந்த சுமார் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன.
'பிரோடெம்ப்ஸ் எம்பிளாய்மண்ட் சர்விசஸ்' எனப்படும் அந்த நிறுவனத்தின் அலுவலகம் பாய லேபார் சதுக்கத்தில் உள்ளது.
கடந்த மாதம் அதன் கணினிக் கட்டமைப்புச் சேவையின் தகவல்கள் களவாடப்பட்டு, கட்டமைப்பில் உள்ள ஆவணங்கள் அழிக்கப்பட்டன. நிறுவனத்தில் பதிந்தவர்களின் தகவல்கள் இணையத்தில் வெளியிட்டப்பட்டுள்ளன.
அவர்களின் அடையாள அட்டை கள் அல்லது கடவுச்சீட்டுகளின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள், தொலைபேசி எண்கள், சம்பளங்கள், வேலைகள், வீட்டு முகவரிகள் போன்ற விவரங்கள் கசிந்துள்ளன.
வேலை வாய்ப்பு தேடியவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள் என்று தெரிகிறது.
'டெசோர்டன் குழுமம்' என்று அறியப்படும் இணைய ஊடுருவல் கும்பல், இணையவழித் தாக்குதலை இம்மாதம் 4ஆம் தேதி நடத்தியதாகக் கூறியது.
தனது தாக்குதலைப் பற்றி இணைய உரையாடல் அறைகளில் இம்மாதம் 7ஆம் தேதி அக்குழு பெருமை பேசியது.
களவாடப்பட்ட ஆவணங்கள், தகவல் திரட்டுகள் ஆகியவற்றைக் காட்டும் காணொளியை அது பதிவு செய்தது. அதில், கணிணிக் கட்டமைப்பிலிருந்து எல்லா ஆவணங் களையும் திருடி, அழித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட 'பிரோடெம்ப்ஸ்' நிறுவனத்துக்கு கும்பல் செய்தி அனுப்பியது. அக்குழு பணம் கேட்டதாகவும் நம்பப்படுகிறது.
மேலும், அக்கும்பல் அந்தத் தகவல்களைக் கடந்த 14ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்தது. தகவல்களைப் பெற $3.30 என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. தகவல்களை இதுவரை 60 வெவ்வேறு தரப்புகள் பெற்றுள்ளன.
அச்சம்பவம் பற்றி 'பிரோடெம்ப்ஸ்' நிறுவனம் தகவல் அளித்துள்ளதாகவும் அது பற்றி விசாரித்து வருவதாகவும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

