இளையரைத் தாக்கிய உணவகக் குழுமத்தின் தலைமை நிர்வாகி
காரணமில்லாமல் மின்தூக்கியில் முன்பின் தெரியாத பதின்ம வயது இளையருக்குத் தொல்லை கொடுத்து அவரைத் தாக்கியதன் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகளை பிரவே உணவு பான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சிலிகி ரோட்டில் உள்ள பார்க்லேன் கடைத்தொகுதியில் நடந்தது. பிரெஞ்சு நாட்டவரான வூ ஹாக் ழான்-லூக் கா, 44, குடித்துவிட்டு போதையில் மின்தூக்கியில் ஏறியிருந்தார்.
அப்போது 13 வயதாக இருந்த சிங்கப்பூர் இளையரும் அவரது 12 வயது தம்பியும் மின்தூக்கியில் இருந்தனர்.
இளையரைப் பார்த்து தகாத சொற்களைப் பேசிய கா, பின்னர் அவரை நெற்றியில் குத்தியதுடன் இடது கையைத் தாக்கினார். பெயர் குறிப்பிடப்படாத அந்த இளையருக்கு அச்சம்பவத்தால் மின்தூக்கியில் ஏறவே பயம் ஏற்பட்டது.
தாக்குதலைப் பற்றிய நினைவுகள் அவரைப் பாதித்தன. அவரது தூக்கமும் கெட்டதாகக் கூறப்பட்டது.
சிறப்புக் காலணிகளுக்காக லஞ்சம்
புதிய, சிறப்புக் காலணிகளையும் கழிவுவிலைக் காலணிகளையும் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த ஒருவர் மீதும் லஞ்சம் வாங்கிய இருவர் மீதும் நேற்று நீதிமன்றத்தில் நேற்று ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதில் ஒருவர் $12,000க்கும் மேற்பட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றார். மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு இதைத் தெரிவித்தது.
ஃபுட் லாக்கர் எனும் கடையில் துணை நிர்வாகியாகப் பணியாற்றிய சேவியர் கோ யிங்சுவான், 30, மெங் ஃபான்சுவான், 27, என்பவரிடமிருந்தும் மேலும் இரண்டு பேரிடமிருந்தும் 36 முறை லஞ்சம் வாங்கினார். கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை மொத்தம் $12,189 லஞ்சம் பெறப்பட்டது.
மேலும், மெங் ஏடபுள்யூ லேப் எனும் நிறுவனத்தில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றிய முகமது ஃபயிஸ் ஏமி ஜஸ்மான், 28, என்பவருக்கும் லஞ்சம் தந்தார். ஐந்து வெவ்வேறு தேதிகளில் $1,500 லஞ்சம் வழங்கப்பட்டது.
கோ, ஃபயிஸ், மெங் மூவர் மீதும் நேற்று லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும், கோ, ஃபயிஸ் இருவரும் பிராயன் ஃபோங் என்ற மற்றொரு நபரிடமிருந்து தனித்தனியே லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.
கோ, ஃபயிஸ், மெங் ஆகியோர் மீதான வழக்குகளின் விசாரணை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
ஆள்மாறாட்டம் செய்து இருமல் மருந்து பெற்றவருக்கு இரண்டு மாதச் சிறை
பலதுறைத் தொழில்கல்லூரி மாணவி ஒருவரின் காணாமல் போன ஈஸிலிங்க் அட்டையைக் கண்டெடுத்த நபர் ஒருவர், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அதை பீஷானில் உள்ள ஒரு மருந்தகத்தில் காட்டி ஏமாற்றி, இருமல் மருந்தையும் மருத்துவ விடுப்பையும் பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மேலும் நான்கு முறை மருந்தகத்துக்குச் சென்று அதே குற்றத்தைப் புரிந்தார்.
அதற்காக, அட்டையில் மாணவியின் படத்துக்குப் பதில் தமது படத்தைப் பொருத்தினார் சிங்கப்பூரரான வான் யிப் லூங், 29. பின்னர் ஈஸி லிங்க் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி போலிசார் மருந்தக ஊழியருக்கு தகவல் அளித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் மருந்தகத்துக்குச் சென்று இருமல் மருந்து வாங்க முயன்றபோது வான் பிடிபட்டார்.
நேர்மையற்ற முறையில் அட்டையைக் கைப்பற்றியது, ஆள்மாறாட்டம் செய்தது, போலி ஆவணம் தயாரித்தது ஆகியவற்றின் தொடர்பில் மூன்று குற்றங்களைப் புரிந்ததாக வான் ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்கள், ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மக்கள் கவிஞர் குறித்த கருத்தரங்கம்
மக்கள் கவிஞர் மன்றம் நடத்திய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62வது நினைவு நாள் கருத்தரங்கம் இம்மாதம் 10ஆம் தேதி மாலை மெய்நிகர் வழி நடைபெற்றது.
மன்றத்தின் தலைவரான புவனேஸ்வரி மகேந்திரன் தமது தலைமையுரையில் இந்த இக்கட்டான பெருந்தொற்றுக் காலகட்டத்திலும் தொடர்ந்து மன்றத்தின் செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா தினகரன், மூத்த கவிஞர் மா அன்பழகன், ஆகியோர் உரையாற்றினர்.
கருத்தரங்கத்தில் "மக்கள் கவிஞர் பாடல்களில் சமூக சிந்தனைகள்" என்ற தலைப்பில் முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணனும், "மக்கள் கவிஞர் பாடல்கள்களில் திருக்குறள் சிந்தனைகள்" என்ற தலைப்பில் முனைவர் ச.ஜெகதீசனும் சிறப்புரையாற்றினர்
குவாங்யங் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரவீன், நவ்ஃபல், டன்மன் ஹை பள்ளி மாணவர்கள் நதிரா, பிளஸ்சி ஆகியோர் சிறப்புரையாற்றியவர்களுடன் கேள்வி பதில் அங்கத்தில் பங்கேற்றனர்.

