மரக்கிளையுடன் பசை போன்ற பொருளால் ஒட்டப்பட்டிருந்த மைனாவை தக்க சமயத்தில் விலங்கு நல ஆய்வு, கல்வி சங்கம் (ஏக்கர்ஸ்) நேற்று முன்தினம் காலையில் காப்பாற்றியது. சுவா சூ காங் ஸ்திரீட் 51, புளோக் 503இல் சிக்கித் தவித்த பறவையைப் பற்றி தனது அவசரசேவை எண்ணுக்கு அழைப்பு வந்ததாக ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
"அந்த வெள்ளை மைனாப் பறவையின் கால்களும் இறக்கைகளும் ஒரு மரக்குச்சியுடன் ஒட்டப்பட்டிருந்தன. அந்தக் குச்சி மரத்துடன் இணைத்து ரப்பரால் இணைக்கப்பட்டிருந்தது," என்று ஏக்கர்ஸ் நிறுவனத்தின் இணைத் தலைமை நிர்வாகியான திரு கலைவாணன் பாலகிருஷ்ணன், 35, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். தற்போது மைனா உடல் நலம் தேறி வருகிறது.
"சரியான நேரத்தில் அழைப்பு வராமல் இருந்திருந்தால், பறவை அதன் இறகுகளையும் நீர்ச்சத்தையும் இழந்து மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சியால் இறந்திருக்கும். அல்லது வேட்டையாடும் வேறு விலங்கிடம் சிக்கி இருக்கும்," என்றது ஏக்கர்ஸ். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்று கருதப்படுகிறது.
சம்பவம் குறித்துத் தகவல்கள் இருந்தால் acrescrime@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். www.avs.gov.sg/feedback அல்லது 1800-476-1600 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். விலங்கு வதைக்கு $15,000 வரை அபராதம் அல்லது 18 மாதம் வரைச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

