செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
93ab597f-1ec2-4979-8250-f03bc55538b0
-

கொவிட்-19: மேலும் மரணங்கள், கிருமித்தொற்று

சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பில் மேலும் 16 பேர் மரணமடைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது. அவர்களுக்கு வயது 61 முதல் 93 வரை என்றும் புதிதாக மரணமடைந்தவர்களையும் சேர்த்து சிங்கப்பூரின் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 280 ஆக உயர்ந்து உள்ளதாகவும் அமைச்சு கூறியது.

மரணமடைந்த 16 பேரில் 12 பேர் ஆடவர்கள். நால்வர் பெண்கள். ஆடவர்களில் 11 பேர் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள். ஒருவர் மலேசியரான ஒர்க்பர்மிட் ஊழியர்.

மாண்ட நான்கு மாதர்களும் சிங்கப்பூரர்கள். அந்த 16 பேரில் ஏழு பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். எட்டுப்பேர் போடாதவர்கள். ஒருவர் ஓர் ஊசி மட்டும் போட்டுக்கொண்டவர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் உடல் நலப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு கூறியது. வியாழக்கிழமை புதிதாக 3,439 பேருக்குத் தொற்று இருந்ததாக தெரியவந்தது. புதிதாக தொற்றியோரில் 2,937 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளைச் சேர்ந்த 500 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்த இரண்டு பேரும் மற்றவர்களில் அடங்குவர். 492 பேருக்கு வயது 60 என்றும் அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்பூரில் கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 162,026.

உல்லாசக் கப்பல் பயணிகளுக்குப் பயண நாளில் ஏஆர்டி சோதனை

'ராயல் கரீபியன்' நிறுவனத்தின் 'குவாண்டம் ஆஃப் தி சீஸ்' உல்லாசக் கப்பலில் பயணம் செய்வோர், நவம்பர் 8ஆம் தேதி முதல், புறப்பாட்டுத் தேதியன்று கப்பல் முனையத்தில் ஏஆர்டி விரைவுப் பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டிய தேவை இருந்து வந்துள்ளது. 'டிரீம் குரூஸ்' நிறுவனத்தின் 'வோல்டு டிரீம்' கப்பலில் செல்வோரும் புறப்பாட்டு நாளன்று ஏஆர்டி பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது.

புதிய பரிசோதனை நிபந்தனை நவம்பர் முழுவதும் நடப்பில் இருந்துவரும் என்று ராயல் கரீபியன் இணையத் தளம் கூறியது. இதுபற்றி சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு நேற்று மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும், டிசம்பர் 2ஆம் தேதி முதல் உல்லாசக் கப்பல் பயணம் மேற்கொள்வோர் பயண புறப்பாட்டு நாளன்று ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலையத்தில் ஏஆர்டி பரிசோதனை செய்துகொண்டு பிறகு கப்பல் முனையத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராயல் கரீபியன் நிறுவனத்தின் குவாண்டம் ஆஃப் தி சீஸ், டிரீம் குரூஸ் நிறுவனத்தின் வோல்டு டிரீம் ஆகிய இரண்டு மட்டுமே இப்போது சிங்கப்பூரில் இருந்து உல்லாசக் கப்பல் சேவையை வழங்கி வருகின்றன.

கொவிட்-19 மரணம்: 'ஈமச்சடங்கு நடைமுறை சிக்கலானது'

சிங்கப்பூரில் அண்மைய நாட்களில் கொவிட்-19 மரணங்கள் அதிகமாகி வருகின்றன. இதன் காரணமாக ஈமச்சடங்குச் சேவைத் துறையினர் சிக்கலான நடைமுறையைப் பின்பற்றவேண்டிய அவசியம் இருந்து வருகிறது.

கிருமித்தொற்றைத் தவிர்க்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை அவர்கள் கடைபிடிக்கவேண்டிய தேவை உள்ளது. விரும்பியபடி ஈமச்சடங்கைச் செய்ய இயலாத அளவுக்கு மரணமடைந்துவிட்டவர்களின் குடும்பத்தாருக்கும் சங்கடங்கள் ஏற்படுவதாகவும் ஈமச்சடங்கு சேவையாளர்கள் கூறுகிறார்கள்.

'இந்து காஸ்கட்' நிறுவனத்தின் நிர்வாகியான ராய் செல்வராஜா இதுபற்றிக் கூறுகையில், இந்த மாதம் தனது நிறுவனம் மூன்று கொவிட்-19 மரண ஈமச்சடங்குகளைக் கையாண்டதாகத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை சென்ற மாதம் ஒன்றாக இருந்தது என்றார் அவர்.

கொவிட்-19 காரணமாக மரணம் அடைவோரின் உடல்களைக் கையாளும்போது, காசநோய் மரணம் போன்றவற்றைப் போலவே கூடுதலான நடைமுறைகளைப் பின்பற்றவேண்டிய தேவை இருப்பதாக 'தி லைஃப் செலிபிராண்ட்' என்ற நிறுவனத்தின் ஈமச்சடங்கு இயக்குநர் டென்னிஸ் சோங் கூறினார்.

அடிப்படை கிருமித்தொற்று கட்டுப்பாட்டுப் பயிற்சிப் படிப்பை முடித்து இருக்கும் ஊழியர்களைக் கொண்ட ஈமச்சடங்கு நிறுவனங்கள் மட்டுமே கொவிட்-19 மரண உடல்களைக் கையாளமுடியும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அந்த ஊழியர்கள் முற்றிலும் சுய பாதுகாப்பு உடை அணிந்து சேவையில் ஈடுபடவேண்டும்.