சிங்கப்பூரின் தனியார் வீட்டு விலைகள், மூன்றாம் காலாண்டில் மேலும் விரைவாக வளர்ச்சி கண்டது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டதுடன் வீவக மறுவிற்பனைச் சந்தையும் சூடுபிடித்துவிட்ட கட்டத்தில், தனியார் தரைவீடுகளின் விற்பனையும் விலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
முந்தைய காலாண்டைக் காட்டிலும் மூன்றாம் காலாண்டில் தனியார் சொத்து மதிப்பு, 1.1% அதிகரித்துள்ளதாக நகர சீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) நேற்று தகவல் வெளியிட்டது. தனியார் வீட்டு விலைகளில், இரண்டாம் காலாண்டில் 0.8% வளர்ச்சியும் முதல் காலாண்டில் 3.3% வளர்ச்சியும் பதிவாகியிருந்தன. மூன்றாம் காலாண்டில் 0.9% வளர்ச்சி இருக்கும் என்ற முன்னுரைப்பைக் காட்டிலும் சற்று அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆண்டு அடிப்படையில், தனியார் வீட்டு விலை 7.5% வளர்ச்சி கண்டுள்ளது.
தனியார் தரைவீட்டு விலை, மூன்றாம் காலாண்டில் 2.6% வளர்ச்சி கண்டது. இரண்டாம் காலாண்டில் இவ்வகை வீடுகளின் விலையில் 0.3% சரிவு இருந்தது.
இதற்கிடையே, கூட்டுரிமை மற்றும் தனியார் அடுக்குமாடி வீட்டு விலை வளர்ச்சி சற்று மெதுவடைந்தது. இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட 1.1% வளர்ச்சிக்குப் பின் மூன்றாம் காலாண்டில் 0.7% அதிகரிப்பு இருந்தது.
தரைவீடு அல்லாத புதிய வீடுகள் விற்பனையான எண்ணிக்கை, மூன்றாம் காலாண்டில் 19.7% அதிகரித்தது. இதன்படி, மூன்றாம் காலாண்டின் 3,550 வீடுகள் விற்பனையாகின.
மறுவிற்பனை பரிவர்த்தனைகளும் அதிகரித்திருந்தன. இரண்டாம் காலாண்டில் 5,333 ஆக இருந்த எண்ணிக்கை மூன்றாம் காலாண்டில் 5,362 ஆக அதிகரித்தது. கடைசியாக 5,000க்கும் மேற்பட்ட மறுவிற்பனை தனியார் வீடுகள் இவ்வாறு விற்பனையானது, 2010ன் இரண்டாம் காலாண்டு என்று கூறப்பட்டது.

