செய்திக்கொத்து

2 mins read
a0ff289a-d08f-4f35-a07a-02249f449a4f
-

அலுவலக, சில்லறை வர்த்தக இடங்களின் வாடகைகளில் சரிவு

சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ள சில்லறை வர்த்தக இடங்களுக்கான வாடகை, மூன்றாம் காலாண்டில் 2.7% சரிந்துவிட்டதாக நகர சீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் 0.5% சரிவு பதிவாகியிருந்தது. அதே மத்திய பகுதியின் அலுவலக இடங்களுக்கான வாடகை, இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் 3.5% சரிந்தது. முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் 1.3% வளர்ச்சி பதிவானதற்கு மூன்றாம் காலாண்டு சரிவு நேர்மாறாக உள்ளது.

தேர்தல் காரணமாக சிங்கப்பூர் பயணத்தை ஒத்திவைக்கும் நஜிப்

மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் அம்னோ கட்சிக்கு உதவி நல்க, தனது சிங்கப்பூர் பயணத்தைத் தள்ளிவைக்க விரும்புவதாக முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நஜிப்பின் மகள் தமது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளார். அவரைக் காண நஜிப் இங்கு வருவதாக இருந்தது. இதற்காக கடப்பிதழைப் பயன்படுத்திக்கொள்ள 68 வயது நஜிப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதியும் வழங்கியது. இதன்படி நவம்பர் 22ஆம் தேதியன்று கடப்பிதழை அவர் மீண்டும் ஒப்படைத்துவிட வேண்டும். நவம்பர் 20ஆம் தேதியன்று மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளதால் கடப்பிதழை இம்மாதம் 25ஆம் தேதிமுதல் டிசம்பர் 12ஆம் தேதிவரை தாம் வைத்துக்கொள்ள நீதிமன்றத்திடம் நஜிப் கோரியுள்ளளார். '1எம்டிபி' விவகாரம் தொடர்பில் நஜிப் மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

'டிரோன்' பயன்படுத்த கட்டட முகப்பு

சோதனையாளர்களுக்கு அறிவுறுத்து

குறைந்தது 30,000 கட்டடங்களை அடுத்த ஏழு ஆண்டுகளில் கட்டட, கட்டுமான ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி சோதனையிட வேண்டியுள்ளது. இந்நிலையில், ஆளில்லா வானூர்தி (டிரோன்) கொண்டு கட்டட முகப்பு மீது அச்சோதனையை மேற்கொள்ளுமாறு சோதனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 13 மீட்டரை விட உயரமான, 20 ஆண்டுக்கும் மேல் பழமைவாய்ந்த கட்டடத்தின் முகப்பை ஏழு ஆண்டுக்கு ஒருமுறை சோதிக்க வேண்டும் என்ற புதிய விதி, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். ஒட்டுமொத்த கட்டடத்தின் முகப்பை மேலும் உன்னிப்பாகப் பார்வையிட டிரோன் தொழில்நுட்பமே கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.