தேசிய இளையர் மன்றம், சிங்கப்பூர் மின்விளையாட்டுக் கழகம், 'ஐஎம்ஜி' என்ற விளையாட்டு, நிகழ்ச்சி நிர்வாக நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து இளையர்களுக்கான மின்விளையாட்டுத் திட்டத்தைத் துவங்கியுள்ளன. இத்திட்டத்தின்படி 100 இளையர்களுக்கு மின்விளையாட்டுத் துறையில் நடைமுறை அனுபவமும் மேம்பாட்டு வாய்ப்புகளும் வழங்கப்படும்.
திட்டம் வழி எதிர்கால லட்சியத்தை அடைவதன் தொடர்பில் இளையர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற சவாலைத் தாம் முன்வைப்பதாக இளையர் மன்ற தலைமை நிர்வாகி டேவிட் சூவா தெரிவித்தார்.
திட்டத்தின் முதல் கட்டமாக தொழில்துறைத் தலைவர்களுடனான மாணவர்களின் குழுக் கலந்துரையாடல்களும் பயிலரங்குகளும் இடம்பெறும். சிங்கப்பூரில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக மின்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் மாணவர்களின் நேரடி ஈடுபாட்டை அறிவதே இரண்டாவது கட்டம்.
இறுதிக் கட்டமாக மின்விளையாட்டுத் தளங்கள், நிறுவனங்களில் குறுகியகால வேலைப்பயிற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பைக் குறிப்பிட்ட சிலர் பெறுவர்.
நன்யாங் பலதுறைத்தொழிற்கல்லூரி, ரிபப்ளிக் பலதுறைத்தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இதர பங்காளி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களின் கல்வி நிலையங்கள் மூலம் திட்டத்தில் இணைய விரும்புவதை இம்மாதம் 25 முதல் 29 தேதிகளுக்குள் தெரிவிக்கலாம்.

