சிங்கப்பூர், கொவிட்-19 காரணமாக பல பாதிப்புகள், சவால்கள், சங்கடங்கள், மிரட்டல்களை எதிர் நோக்கி வந்துள்ளது, வருகிறது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு மிரட்டலும் தலைதூக்கி இருக்கிறது.
சிங்கப்பூரின் சுகாதார முறைக்குச் சுமை கூடுகிறது. அப்போதைக்கு அப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கட்டுப்பாடுகளின் மிக முக்கிய நோக்கம் இதுவரை கொவிட்-19 பரவு வதைத் தடுப்பதாகத்தான் இருந்து வந்துள்ளது.
அந்த நோக்கத்துடன், சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு அளவுக்கு அதிக சுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதும் இப்போது அவசிய அவசரமானதாக ஆகி இருக்கிறது.
அதிகமாகி வருகின்ற தொற்றைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்தும் இலக்குடன் அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை பல்வேறு கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டு இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். அன்றாட கிருமித்தொற்று அதிகமாக இருந்து வருவதன் காரணமாக நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை வேகமாகக் கூடிவிட்டது. கொவிட்-19 நோளி களுக்கான படுக்கைகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டு படுக்கைகள் இப்போது நிரம்பிவிட்டன.
தீவிர சிகிக்சைப் பிரிவைப் பார்க்கையில், மூன்றில் இரண்டு பங்கு படுக்கைகளில் கொரோனா நோளிகளும் இதர நோளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் அரசாங்கம் மேலும் படுக்கை வசதிகளைச் செய்து தருவதற்குத் தராக இருக்கிறது.
என்றாலும் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளாக, வழக்கமான சேவைகளும் மருத்துவப் பரா மரிப்பும் பாதிக்கப்படத்தான் செய்யும். மருத்துவமனை களில் சேர்ந்து சிகிச்சைபெற வேண்டிய தேவை கொவிட்-19 நோளிகளுக்கும் மற்ற நோளிகளுக்கும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நாடு கொரோனா காரணமாக ஏற்படுள்ள பல்வேறு சவால்களைச் சந்திக்கும் ஒரு நேரத்தில், இத்தகைய நோளிகள், அவர்களுக்குத் தேவைப்படக்கூடிய சிகிச்சைகள் முதலானவற்றையும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டிய தேவை உள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அவர்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குப் படுக்கை வசதிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கவேண்டிய தேவை இருக்கையில், மருத்துவமனைகளுக்குக் கணிசமான அளவுக்கு சுமை இருந்து வரும் என்பதில் ஐயமில்லை.
இந்தச் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன்தான் இப்போது ஒரு மாத காலத்திற்குக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களிலும் வீடுகளிலும் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி, சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு ஏற்பட்டுள்ள சுமையை அதன்மூலம் குறைப்பதே அதன் இலக்கு.
இருந்தாலும் கட்டுப்பாடுகள் தொடர்வதால் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்புகளை நினைக்கும்போது கவலை கூடுகிறது.
அப்போதைக்கு அப்போது கட்டுப்பாடுகள் மாறி மாறி விதிக்கப்பட்டு வருவதால் ஊழியர் சம்பளம், இட வாடகை போன்ற பல பிரச்சினைகளுடன் பல நிறுவனங்கள் திக்குமுக்காடுகின்றன.
இதைக் கருத்தில்கொண்டு நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் முடிந்த அளவுக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டிவருகிறது. கட்டுப்பாடுகள் தொடர்வதால் பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு உதவும் வகையில் வேலை ஆதரவுத் திட்டத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது. இதன்படி இப்போது கால்வாசி சம்பள ஆதரவு கிடைக்கும்.
ஆனாலும் மாறி மாறி கட்டுப்பாடுகள் வருவதும் அதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதும் அரசு உதவி ஓரளவுக்குக் கைகொடுப்பதும் நெடுங்காலத்திற்கு இப்படியே தொடர இயலாது என்பது நடைமுறை உண்மை. பொதுமக்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளுமே வழக்கமான காலத்திற்கு விரைவாகத் திருப்புவதையே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
இதை முடிந்தவரை விரைவாக சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதியுடன்தான், இங்கு தடுப்பூசி இயக்கம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உலக அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது ஒரு பக்கம், தடுப்பூசி இயக்கம் மறுபக்கம், பொறுப்புகளை, கடமையை உணர்ந்து பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றி நடந்துகொண்டு ஒத்துழைத்து வருவது வேறொரு பக்கம் என்று எல்லாம் இருந்தாலும்கூட அண்மைய நாட்களில் அன்றாடத் தொற்று அதிகமாக இருந்து வருகிறது.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை கூடி இருக்கிறது உண்மைதான் என்றாலும் கடந்த சில வாரங்களில் கொவிட்-19 தொற்றுகள் நிலைப்பட்டு வருவதை எல்லாரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொற்று ஏற்படுவோருக்கு உண்டாகக்கூடிய பாதிப்புகளும் குறைந்து இருக்கின்றன.
என்றாலும் மரணங்கள், கடும் பாதிப்பு ஆபத்துகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களுக்குத்தான் அதிகம் என்பதை நேற்றுகூட கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு சுட்டிக்காட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அவர்களை வலியுறுத்தி உள்ளது.
எல்லை கட்டுப்பாடுகள், தடுப்பூசி, பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்ட சிங்கப்பூரின் அணுகுமுறை தனித்துவமான அணுகுமுறை என்றும் அது கொரோனா மரணங் களை, கடும் பாதிப்புகளைக் குறைத்துள்ளது என்பதையும் பணிக்குழு சுட்டி இருக்கிறது.
எல்லை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது; தேசிய தடுப்பூசி செயல்திட்டத்தில் சினோவேக் தடுப்பூசியைச் சேர்த்து தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துவது; பூஸ்டர் தடுப்பூசியைத் தீவிரப்படுத்துவது; முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குத்தான் வேலை யிடம் செல்ல அனுமதி போன்ற புதிய முயற்சிகளை, திட்டங்களை பணிக்குழு அறிவித்து இருக்கிறது.
சூழ்நிலை மேம்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் பணிக்குழு உறுதிகூறி இருக்கிறது. ஆகைல் கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு இருப்பதை கவலை தரும் அம்சமாகப் பார்க்காமல் நம்பிக்கை தரக்கூடிய ஓர் அணுகுமுறைக நாம் கருதவேண்டும். தொற்றைக் கண்டு துவண்டுவிடுவது விவேகமான தல்ல.
தொற்று விரைவில் ஒடுங்கும்; சுகாதாரப் பராமரிப்புத் துறைக்குச் சுமை குறையும்; வழமை நிலை விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்புகளை, கடமைகளை உணர்ந்து தொடர்ந்து செயல்படுவோம்.

