முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட, 35 வயதை எட்டாத, கருத்தரித்து 26 வாரங்கள் ஆகாத கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் அவர்கள் வீட்டிலேயே இருந்து குணமடைய அனுமதிக்கப்படுவர்.
என்றாலும் இந்த ஏற்பாட்டுக்கு அவர்கள் பொருத்தமானவர்கள்தானா என்பது அவர்களுக்குக் குறிப்பிட்ட மருத்துவமனைகள் நடத்தும் பரிசோதனை மூலம் உறுதியாகவேண்டும்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் நேற்றுப் பேசிய வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், வீட்டில் குணமடையும் செயல்திட்டம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, வீட்டிலேயே குணமடையும் செயல்திட்டத்தில் இருப்போருக்குத் தொலைதூர மருத்துவ ஆதரவுச் சேவையை வழங்குவதில் மேலும் அதிக தனியார் மருத்துவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சிறப்புப் பணிக்குழு தெரிவித்தது.
கொவிட்-19 கிருமி தொற்றி இருந்தாலும் அறிகுறி இல்லாத அல்லது இலேசான அறிகுறியுடன் கூடிய நோயாளிகள் வீட்டிலேயே குணமடையும் ஏற்பாடு செப்டம்பர் 15 முதல் நடப்புக்கு வந்தது. அது இப்போது இயல்பானதாக ஆகி இருக்கிறது.
இருந்தாலும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, 50, அதற்கும் அதிக வயதுள்ள மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள 80, அதற்கும் அதிக வயதுள்ள மக்களும் இந்தச் செயல்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
வீட்டிலிருந்து குணமடைய பொருத்தமற்றவர்கள் என்பது மருந்தகப் பரிசோதனை மூலம் தெரியவந்து இருக்கும் 1 முதல் 4 வரை வயதுள்ள குழந்தைகளும் பிறந்து ஓராண்டு ஆகாத கைக்குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்கலாம் என்பதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியது.

