வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள்தான் வேலையிடத்துக்குத் திரும்ப முடியும் எனும் புதிய கொவிட்-19 நடவடிக்கையால் தங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று வர்த்தகங்கள் கூறியுள்ளன. சிங்கப்பூரில் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அவை சுட்டின.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நேற்று முன்தினம் அறிவித்த அந்த புதிய விதிமுறை, எல்லா ஊழியர்களுக்கும் பொருந்தும்.
கடந்த 270 நாட்களில் கிருமி தொற்றி குணமடைந்தோரும் வேலையிடத்துக்குத் திரும்பலாம்.
சிங்கப்பூர் சிறிய நடுத்தர வர்த்தகங்கள் சங்கத்தின் தலைவர் கர்ட் வீ, புதிய விதிமுறையை வரவேற்றார். கடந்த நான்கு அல்லது ஐந்து மாதமாகவே நிறுவனங்ககள், தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி தங்கள் ஊழியர்களை ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ குவான், சங்கத்தில் உள்ள 5,000 உணவகங்களில் பெரும்பாலானவற்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்டு இருப்பதாகக் கூறினார்.
அரசாங்கத்தின் புதிய விதி முறையை வர்த்தகங்கள் வரவேற்கும் என்றார் அவர். ஏனென்றால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாவிட்டால், வர்த்தகத்துக்கு மேலும் இடையூறு நிகழும் என்று திரு குவான் விளக்கினார்.
தேசிய அளவில், ஊழியர் அணியில் 96 விழுக்காட்டுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மேலும் 70% நிறுவனங்களில் அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

